இலங்கை பிரச்னையில் ஜெயலலிதா, ராமதாஸ் நாடகம் புதுச்சேரியில் ஸ்டாலின் சரமாரி குற்றச்சாட்டு
மே 09,2009,00:00 IST
Latest indian and world political news information
புதுச்சேரி:"இலங்கைப் பிரச்னையில் ஜெயலலிதாவும், ராமதாசும் நாடகம் நடத்திக் கொண்டுள்ளனர்,' என்று ஸ்டாலின் கூறினார்.புதுச்சேரியில் காங்., வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்தார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது:
சிறப்பு மாநில அந்தஸ்து, மாநிலத்திற்கென தனி பல்கலைக்கழகம் அமைய நாராயணசாமி துணையாக இருப்பார். அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இலங்கையில் தமிழர்களைக் காக்க கருணாநிதி 1956ம் ஆண்டு முதல் குரல் கொடுத்து வருகிறார். அப்போது நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானத்தை முன் மொழிந்தவர் கருணாநிதி. பலமுறை போராட்டம் செய்ததுடன் பதவியைக்கூட ராஜினாமா செய்துள்ளார். இலங்கைத் தமிழர் விஷயத்தில் ராமதாஸ், ஜெயலலிதா கபட நாடகமாடுகின்றனர்.
இலங்கைத் தமிழர்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தார். இதனால் 6 மணி நேரத்திற்குள் போர் நிறுத்தம் என்ற தீர்வு உண்டானது. இதை பார்த்து நாடகமாடுவதாக டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். உங்களுக்குப் பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு, தற்போது கருணாநிதிதான் என கொச்சைப்படுத்தி பேசி இருக்கிறார்.
ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி மாறுகிற பச்சோந்தி, கடைசி வரை பதவியில் இருந்து அடிக்க வேண்டியதெல்லாம் அடித்து முடித்து விட்டு, கடைசி நேரம் வரை தன்னை அரசியல் வியாபாரியாக அடையாளம் காட்டிக் கொண்ட ராமதாஸ், லேட்டஸ்ட் நடிகர் கருணாநிதி என பேசியிருக்கிறார். இங்கிருக்கும் மக்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். இன்றைக்கு நாட்டில் அரசியல் வியாபாரி யார்? (ராமதாஸ் என கோஷம் எழுந்தது) இதனை நான் சொல்லவில்லை. மக்கள் கூறுகின்றனர்.
தனி ஈழம் வேண்டும் என மேடையில் ஜெயலலிதா முழங்கி வருகிறார். 10 ஆண்டுகள் முதல்வராக இருந்தபோது தனிஈழம் வேண்டும் என்ற முயற்சியில் ஏன் ஈடுபடவில்லை... எம்.ஜி.ஆர்., பிறந்த தினத்தன்று, அவர் என்ன பேசினார் தெரியுமா... இலங்கையில் நடக்கின்ற போர், தமிழர்களுக்கும் ராணுவத்தினருக்கும் நடக்கின்ற போர் அல்ல. ராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடக்கின்ற போர் என்று சென்னார்.
போர் என்றால் மனிதர்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்ன ஜெயலலிதா இன்றைக்கு திட்டமிட்டு அரசியல் நடத்தி வருகிறார். மத்தியில் பாஜ., ஆட்சியில் இருந்தபோது பா.ம.க.,வை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருந்தனர். இப்போது காங்., தலைமையிலான ஆட்சியில் டாக்டர் ராமதாசின் மகன் அமைச்சராக இருந்தார். அப்போது எத்தனை முறை அமைச்சரவை கூடியிருக்கிறது... எம்.பி.,க்களைச் சந்தித்துள்ளார்; கூட்டணித் த
லைவர்களைச் சந்தித்துள்ளார்; அப்போது இலங்கைப் பிரச்னை குறித்து பேசாதது ஏன்? மத்திய மாநில அரசுகளைப் பற்றி எந்தவித குறையும் சொல்ல முடியாமல், இலங்கை பிரச்னையை கையில் எடுத்துக் கொண்டு நாடகத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
No comments:
Post a Comment