தமிழகம், புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உறுதி
மே 01,2009,00:00 IST
Latest indian and world political news information
புதுச்சேரி:"தமிழகம், புதுச்சேரியில் இரண்டு மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும்,' என்று பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.புதுச்சேரியில் பா.ம.க., வேட்பாளர் ராமதாசை ஆதரித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: புதுச்சேரி மாநிலத்திலிருந்து காங்., கட்சியை வேரோடு பிடுங்கி எறிய மக்கள் நினைக்கின்றனர்.
தமிழகத்தில் 35 தொகுதிகளில் சுற்றி வந்து விட்டேன். மக்கள் சக்தி அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ந்து வருகிறது.புதுச்சேரி மாநிலம் எல்லா நிலையிலும் முதன்மை மாநிலமாக வர நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு முன், காங்., இல்லாத ஆட்சி அமையப் போகிறது என்ற நல்ல செய்தியை உங்களுக்கு சொல்கிறேன். எங்கள் வேட்பாளர் ராமதாஸ் தனது சாதனைகளை அறிக்கையாக அளித்துள்ளார். அனைத்து தரப்பினரும் படித்து பார்க்க வேண்டும். பணமா.. சேவையா.. என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
சேவையைத்தான் மக்கள் தேர்வு செய்வார்கள். நாராயணசாமி எப்படிப்பட்டவர் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெரியும். அவரது கட்சியினரே அவரைப் பற்றி கூறுவார்கள். அவருக்கு ஓட்டு போடுவது கொல்லிக்கட்டையை எடுத்து தலையில் சொறிந்து கொள்வதற்கு சமம். மத்தியிலும், மாநிலத்திலும் புரட்சிகரமான, முற்போக்கு சிந்தனை கொண்ட முதன்மையான அரசு அமைய உள்ளது.
2 மாதத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் நடக்கும்."தனக்கு மக்கள்தான் குடும்பம்; கருணாநிதிக்கு குடும்பம்தான் மக்கள்' என ஜெயலலிதா கூறுவார். அதைப்போல் ரங்கசாமி, மக்கள் தான் குடும்பம் என பணியாற்றியுள்ளார். நல்லாட்சியை தந்த முதல்வரை பதவியில் இருந்து தூக்கினர். காமராஜர் ஆட்சியை அளித்த முதல்வரை பதவியில் இருந்து தூக்கியதற்கான காரணத்தை மக்கள் கேட்கின்றனர். எனக்கு தெரியாது என நாராயணசாமி சத்தியம் செய்கிறார்.
நாராயணசாமி சொன்னால் சோனியா கேட்பார். இந்திய அளவில் காங்., அழியப் போகிறது. இரண்டு மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிகழப் போகிறது. என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. ரங்கசாமி முதல்வராகும் காலம் நிச்சயமாக உள்ளது. மக்கள் கூறுவதை நான் சொல்கிறேன். புதிய மாற்றங்கள் வர மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்
No comments:
Post a Comment