கூட்டணி அமைத்து கொள்ளை: விஜயகாந்த்
ஏப்ரல் 29,2009,00:00 IST
Latest indian and world political news information
திருத்தணி : "கூட்டணி அமைத்துக்கொள்ளை அடிப்பது அதை பங்கு போட்டு பிரிப்பது என்பதற்காக தான் கூட்டணி. அதுபோன்ற கூட்டணியில் சேர நான் விரும்பாமல் தனித்து நிற்கிறேன்' என, விஜயகாந்த் ஆவேசமாகப் பேசினார்.
அரக்கோணம் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் சங்கரை ஆதரித்து திருத்தணி நகராட்சி அலுவலகம் மற்றும் அரக்கோணம் பஸ் நிலையத்தில் கொளுத்தும் வெயிலில் நேற்று விஜயகாந்த் பேசியதாவது:விலைவாசி உயர்வுக்கு பொதுமக்கள் தான் காரணம். தி.மு.க., - அ.தி.மு.க., என இரு கட்சிகளுக்கும் மாறி மாறி ஓட்டு போட்டதால் அவர்களே ஆட்சி செய்து வருகின்றனர். இதனால், விலைவாசி உயர்வு, மின்தட்டுப் பாடு, வறுமை போன்றவையால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இலங்கைப் பிரச்னை குறித்து ஜெயலலிதா தமிழீழம் ஒன்று தான் தீர்வு எனப் பேசி வருகிறார்.அவர் இவ்வளவு நாட்கள் இதுகுறித்து மவுனமாக இருந்துவிட்டு தற்போது பேசுவது தேர்தலுக்காக தான். இலங்கையில் போர் நிறுத்தம் அறிவித்தது அங்கு தமிழர்கள் முழுவதும் கொலை செய்யப்பட்டுவிட்டனர். இனியும் குண்டு போட்டால் அங்குள்ள சிங்களர்கள் தான் இறந்து போவார்கள்.
எனவே தான், போர் நிறுத்தம் அறிவித்துள்ளனர். இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது, தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக நடத்திய நாடகம் தான். கருணாநிதி அணிந்து வரும் மஞ்சள் துண்டு குரு பகவானைக் குறிக்கும்.நாங்கள் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை. மக்கள் மற்றும் ஆண்டவனோடு மட்டும் தான் கூட்டணி அமைத்துள்ளோம். மக்களாகிய நீங்கள் சிந்தித்து ஓட்டு போட் டால், 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.லோக்சபா தேர்தலில் தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. தேர்தலில் கூட்டணி அமைப்பது கூட்டு சேர்ந்து கொள்ளை அடித்து, பின் பங்கு போட்டுக்கொள்வதற்காக தான். நான் மக்கள் பணத்தைக் கொள்ளை அடிக்க விரும்பாததால் தான் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் மக்களோடு கூட் டணி வைத்து தேர்தலை சந்திக்கிறேன்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
அவரது பேச்சைக் கேட்க கொளுத்தும் வெயிலிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.
"கருணாநிதிக்கு நடிக்கவும் தெரியும்' :வறுமையும், ஊழலும் இரண்டற கலந்தது தான் தி.மு.க., ஆட்சி. இலங்கைப் போர் நிறுத்தம் குறித்து கருணாநிதி ஒரு நாடகத்தை காலை 6 மணிக்குத் துவங்கி 12.30 மணிக்கு முடித்துள் ளார். போர் நிறுத்திவிட்டதாகக் கூறி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.அதாவது, காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக உள்ளது கருணாநிதியின் உண்ணாவிரத நாடக அரங்கேற்றம். சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக இருந்தால் ரத்தக் கொதிப்பு இருப்பதைப் பார்க்க எதற்கு அங்கு டாக்டர்கள்?கருணாநிதிக்கு கதை வசனம் மட்டுமே தெரியும் என்று பார்த்தேன். ஆனால், நன்றாக நடிக்கவும் செய்கிறார். போர்வை போர்த்தி எட்டு ஏர் கூலர்கள் வைத்துக் கொண்டு வாடினேன், வதங்கினேன் என்றால் நியாயமா? தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் இலங்கைத் தமிழர்களை வைத்து ஏமாற்றுவேலை நடத்தி வருகின்றனர்.பா.ம.க., செயற்குழு கூட்டம் போட்டு அ.தி.மு.க., - தி.மு.க., என பெட்டி வைத்து ஓட்டு போட்டனர். ஆனால், அதில் பா.ம.க.,வின் நிலைப்பாடு குறித்து அறிவதற்கு பா.ம.க., என்ற பெட்டி வைத்திருக்க வேண்டும். இந்தியாவில் நெம்பர் 1 பணக்காரர் பட்டியலில் கருணாநிதி உள்ளார்.ஜெயலலிதாவுக்குக் குடும்பம் இல்லை என்றால் பையனூர், சிறுதாவூர், ஐதராபாத் திராட்சைத் தோட்டம் எல்லாம் எதற்கு?இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
No comments:
Post a Comment