'நான் ஏன் பிறந்தேன்’... எம்.ஜி.ஆரால் விகடன் இதழில் எழுதப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர். அந்தத் தொடரில் இருந்து சில பகுதிகள் இங்கே...
1957-ம் ஆண்டின்போது தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது கழகத்துக்கு என்று உதவி செய்ய, பிரபல பத்திரிகைகளோ, புகழ் பெற்ற பெரியவர்களோ இல்லை. கழகத்தின் கையில் பணமும் இல்லை. பதவிகளும் கிடையா. வியாபாரிகளோ, மில் உரிமையாளர்கள், மிராசுதாரர்கள், மடாதிபதிகள் போன்றவர்களோ, கான்ட்ராக்டர் போன்றவர்களோ பணம் கொடுக்கத் தயாராக இல்லை.
எனவே, ஆடம்பரமாகச் செலவு செய்யப் பணமும் இல்லை. கழகத்தின் கொள்கையை விளம்பரப்படுத்த நாளேடுகள் போன்றவற்றின் உதவியும் இல்லை. அப்படிப்பட்ட நெருக்கடி நிலையில், இன்றைய தமிழக அமைச்சர்களில் ஒருவரான மாண்புமிகு திரு. ப.உ.சண்முகம் அவர்கள், தனது தொகுதியில் தேர்தலுக்கு நின்றார். அண்ணாவின் தம்பிக்குரிய நல்ல தன்மைகள் அனைத்தையும் ஒருங்கே பெற்று, கழகக் கோட்பாடுகளில் மிகமிக நெருக்க உணர்வுகொண்டு இருந்தார். இந்த நண்பர் எப்படியும் வெற்றி பெற்று, சட்டமன்றத்தில் அமர வேண்டும் என்று பெரிதும் ஆசைகொண்டேன். நான் அன்று அவருக்குப் பணம் கொடுக்கும் வசதியில் இருக்க வில்லை. அவருக்காக வாக்குகள் கேட்டு மக்களை ஈர்க்க முயலும் ஒரே ஒரு சக்திதான், அந்தத் தொண்டைச் செய்யும் வசதி மட்டும்தான் என்னிடம் இருந்தது. அவர்களுக்காக தொண்டாற்ற வேண்டும் என்ற பேராவலில் அவரிடம் நானே வலியச் சென்று கேட்டேன். அவர் எப்போதும் போல் சிரித்தவாறே சொன்னார், ''இந்தத் தேர்தல் நமது கழகத்துக்கு முதல் தேர்தல் அனுபவமாகும்! இதில் நாம் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நமது கழகத்துக்கு என்று தனிச் சின்னமே தரப்படவில்லை. அந்தத் தகுதி இப்போது நமக்கு இல்லை.
முதலில் அந்தத் தகுதியை நாம் இந்தத் தேர்தலில் பெற்றாக வேண்டும். எனது தொகுதியில் சிக்கல்கள், இடைஞ்சல்கள் அதிகம்தான். எனினும், நான் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடுவேன். வெற்றி பெறப் பெரிதும் போராடினாலும் வெற்றி கிட்டாது போலும் என்றிருக்கும் தொகுதிகள் நிறைய உண்டு. அப்படிப்பட்ட தொகுதிகளுக்கு நீங்கள் சென்று பிரசாரம் செய்வீர்களானால், அந்த நண்பர்களுக்கும் கழகத்துக்கும் நல்லதோர் உதவி செய்தவர்கள் ஆவீர்கள்!'' என்று சொன்னார். அவருடைய பேச்சு எந்த அளவுக்குப் பக்குவம் நிறைந்து இருந்ததோ அந்த அளவுக்குக் கண்டிப்பாக இருந்தது.
தேர்தல் முடிந்தது. கழகத் தோழர்கள் பலர் நல்ல பண்பு இருந்தும் மக்களுக்கு உழைக்கும் ஆர்வமும் ஆற்றலும் இருந்தும் தோற்றுவிட்டார்கள். தப்பியவர்களில் திரு. ப.உ.ச. அவர்களும் ஒருவர் என்ற சேதி கிடைத்தது. ஏனோ, மகிழ்ந்தேன். இந்த 15 பேர்களாவது வெற்றி பெற்றார்களே என்பதுதான்!
அடுத்த தேர்தலும் வந்தது. மதிப்புக்குரிய காமராசர் அவர்கள் பகிரங்கமாகச் சொன்னார்கள், '1962-ம் ஆண்டு தேர்தலின் முடிவில் இந்த 15 பேர்களும் தோற்றுவிட்டார்கள் என்ற சேதி வெளியிடப்படும்!’ என்று.
அவருடைய வழக்கம்போல் மக்களைச் சந்தித்தும் தேர்தலில் வெற்றி பெற அவர் செய்ய வேண்டிய தொண்டுகள் அனைத்தையும் புயல்போல் நிறை வேற்றினார். தமிழகத்தின் இன்றைய முதல்வர் கலைஞர் ஒருவரைத் தவிர, மற்ற 14 பேரும் தோற்றுப் போனார்கள்.
தோல்வியிலும் வெற்றியைக் காணும் அமரர் அண்ணாவின் கொள்கை, இதிலும் தோல்வியில் வெற்றியே கண்டது. 14 பேர்களைத் தோற்கடித்தார்கள். ஆனால், அதே சட்டமன்றத்தில் முன்பிருந்த 15 பேர்களுக்குப் பதிலாக 50 பேர்கள் கழகப் பிரதி நிதிகளாக அமர்ந்தார்கள்.
அந்தத் தேர்தலில் தோல்வி அடைந்த திரு. ப.உ.ச. அவர்கள் சென்னைக்கு வந்தபோது நாங்கள் சந்தித் தோம். அவரைப் பார்ப்பதற்கே எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. தோளில் பலமாகத் தட்டிய வாறு என்னை இழுத்து அணைத்துக்கொண்டு, அதே சிரிப்போடு உரத்த குரலில் கலகலவென்று வலுவோடு வார்த்தைகள் வெளியே வரும்படி பேசினார்... ''விஷயம் தெரியுமா? நான் தோத்துட்டேன். என்னை எதிர்த்தவர் நல்ல புத்திசாலி. மக்கள்கிட்ட எதெச் சொல்லி, எப்படி நெருங்கினா, ஓட்டு வாங்கலாங்கிறதெ, என்னைக் காட்டிலும் நல்லாத் தெரிஞ்சுவெச்சிருக்கார். அந்தத் தந்திரத்தை சரியாப் பயன்படுத்தி, அருமையா என்னைத் தோற்கடிச்சுட்டார்'' என்றார். நான் அவரையே பார்த்தேன். அது மட்டுமல்ல... 'திருவண்ணாமலையில் ஒரு பொதுக் கூட்டம் போடப் போகிறேன். அதில் வந்து பேச வேண்டும்’ என்றார்.
நான் விரக்தி மன நிலையில் கேட்டேன், ''எதுக்காகக் கூட்டம்? தோற்கடித்தார்களே அந்த மக்களுக்கு நன்றி சொல்லவா?'' என்று.
''தோற்றது உண்மைதான். ஆனால், ஜாமீன் பணத்தைத் திரும்பப் பெறும் அளவுக்கு ஓட்டுக்கள் போட்டிருக்கிறார்களே, அந்த வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டாமா?'' - இது சிரிப்போடும், தன்னம்பிக்கையோடும், ஏமாற்றமற்ற வகையிலும் உளமார என்னைத் திருப்பிக் கேட்ட கேள்வி.
அது மட்டுமல்ல, மேலும் தொடர்ந்தார்... ''ஒரு சில வாக்குகள் குறைந்ததால்தானே தோற்றேன். அந்த வாக்குகளும் கிடைத்திருக்குமானால், இப்போது எனக்கு அளித்திருக்கும் வாக்காளர்களையும் சேர்த்துப் போற்றிப் புகழ்ந்து நன்றி கூறியிருப்போம் அல்லவா? அப்போது நாம் காட்டும் நன்றியை இப்போதும் காட்டுவதற்கு நமக்கும் கடமை இருக்கிறது. அதைப் பெற அவர்களுக்கும் உரிமை இருக்கிறது!'' இதையும் அவருக்கே உரித்தான சிரிப்போடுதான் சொன்னார்!
No comments:
Post a Comment