பிரதமராக இருந்த சந்திரசேகர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, 1991 ஜூன் மாதம் லோக்சபா தேர்தல் நடந்தது. இத்தேர்தலில், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., வுடன் இ. காங்கிரஸ் கூட்டணி கொண்டிருந்தது. இரண்டு கட்டங்களாக இந்த தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் செய்ய ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜிவ் காந்தி, மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் லோக்சபா தேர்தல் முடிவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ராஜிவ் கொலை செய்யப்பட்டதால், இந்தியா முழுவதும் அனுதாப அலை வீசியது.
இரண்டாம் கட்ட தேர்தல் நடந்த தொகுதிகளில் இந்திரா காங்கிரஸ் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றது. என்றாலும், 543 இடங்களை கொண்ட லோக்சபாவில், காங்கிரசுக்கு 232 இடங்களே கிடைத்தன. ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி இல்லாத நிலையில், தனிபெருங்கட்சி என்ற முறையில், இந்திரா காங்கிரஸ் கட்சி தலைவர் நரசிம்மராவை, ஜனாதிபதி வெங்கட்ராமன் ஆட்சி அமைக்க அழைத்தார்.
எம்.பி., பதவி இல்லாத நிலையில், நரசிம்மராவ் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின், அதே ஆண்டு நவம்பர் 17ம் தேதி நந்தியால் லோக்சபா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் ஐந்து லட்சத்து 80 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். மெஜாரிட்டி இல்லாத நிலையிலும், நரசிம்மராவ் பிரதமராக தொடர்ந்து பதவியில் நீடித்தார்.
No comments:
Post a Comment