கருவோடு உயிராகி
உணர்வோடு உயிராகி
தாயின் மடியில் உலாப்போனது
வாழ்வின் நிலாக்காலம்...
"பேதை"பெண்ணாகி
போதை மொழிபேசி
பொலிவுடன் திகழ்ந்தது
வாழ்வின் இளமைக்காலம்...
"பெதும்பை"பருவத்தில்
பதுங்கியிருந்ததால்
பாதி உலகம் மறந்தது
வாழ்வில் வசந்த காலம்...
"மங்கை" நான் மலராகி
மணாளன் தோள் மீது
மயங்கி மகிழ்ந்தது
வாழ்வின் வசந்த காலம்...
"மடந்தை" பருவத்தில்
மழலையின் மொழியில்
மகிழ்ந்து குலைந்து கரைந்தது
வாழ்வின் பொற்காலம்....
"அரிவை" யாகி அனைத்தும் அறிந்து
தெரிவை பெண்ணாகி
தெளிந்து நிற்பது
வாழ்வின் நிகழ்காலம்....
"பேரிளம்" பருவத்தில்
பேரன் பேத்தியுடன்
பேரானந்தம் பெறப்போவது
வாழ்வின் எதிர் காலம்....
வா என்றழைத்து
வருந்தி அழுதாலும்
வராமல் போவது
வாழ்வின் இறந்தகாலம்...
No comments:
Post a Comment