சிவகங்கை & மதுரை சாலை யில் மாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது நாட்டாகுடி கிராமம்.
இங்கு 1964ம் ஆண்டு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. இங்கு 1 முதல் 5 வகுப்புகள் வரை உள்ளன. பள்ளி தொடங்கிபோது நூற்றுக்கணக்கான மாணவர்கள் சேர்ந்து கல்வி கற்றனர்.
தற்போது மூன்றாம் வகுப்பில் மாணவி நித்யா, ஐந்தாம் வகுப்பில் மாணவர் சமயத்துரை ஆகிய இருவர் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு வகுப்பு எடுக்க ஓர் ஆசிரியை மட்டுமே உள்ளார். அவர்தான் பள்ளியின் தலைமை ஆசிரியையும்கூட.
நாட்டாகுடியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன.
ஆனால், சாலை, குடிநீர், போக்குவரத்து உள்பட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. குறிப்பாக இந்த கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாததால் பணிக்கு ஆசிரியர்கள் வருவதென்றால் தங்கள் சொந்த வாகனத்தில்தான் வர வேண்டும், அல்லது ஆட்டோ மூலம்தான் வர வேண்டும். தற்போது பள்ளிக்கு வந்துகொண்டிருக்கும் ஒரு ஆசிரியை மதுரை & சிவகங்கை சாலையில் உள்ள படமாத்தூர் விலக்கிலிருந்து மாத வாடகைக்குப் பேசி ஆட்டோவில் வந்துகொண்டிருக்கிறார். இப்பகுதியில் பைக்குகளில் வருவோரிடம் சிலர் வழிப்பறியில் ஈடுபடுவதால் பைக்கில் யாருமே வருவதில்லை.
சாலை வசதியும் மிகவும் மோசமாக இருப்பதால் ஆட்டோ டிரைவர்கள்கூட இங்கு வர மறுக்கின்றனர். இதனால், ஆசிரியர்கள் பலர் இடமாறுதல் வாங்கிச் சென்றுவிட்டனர். ஒரு சில ஆசிரியர்களை மட்டுமே கொண்டு பள்ளி இயங்கியதால் மாணவர்கள் தரமான கல்வியைப் பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் தங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்ப்பதை நிறுத்திக்கொண்டனர்.
இதற்கிடையே, 10 ஆண்டுகளுக்கு முன் வறட்சி ஏற்பட்டபோது இந்த கிராமத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் நகரத்தை நோக்கிக் குடிபெயர்ந்தன. இதனால், மாணவர்களின் எண்ணிக்கை நாளடைவில் வெகுவாகக் குறைந்தது.
வறட்சியைத் தாங்கி நின்ற குடும்பங்களில் சிலர் வேலைக்காக நகரங்களுக்குச் சென்று வர பஸ் வசதி இல்லாததால் அவர்களும் நகரங்களுக்கே குடிபெயர்ந்து சென்றுவிட்டனர்.
இதனால், பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை மொத்தத்தில் நின்றுவிட்ட நிலையில் தற்போது 2 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர்.
தமிழகத்தில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளுக்கு போதிய ஆசிரியர் இல்லாத நிலையில் 2 மாணவர்களுக்காக ஓர் ஆசிரியை இங்கு பணியாற்றுவது பரிதாபமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கை பெருகிவிட்ட நிலையில் இதுபோன்ற அரசுப் பள்ளிகளின் நிலையை அறிந்து பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதில்லை.தனியார் பள்ளிகளுக்கு இணையாக அடிப்படை வசதிகளை உயர்த்துவதோடு கல்வித் தரத்தையும் உயர்த்தினால்தான் அரசுப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கக்கூடிய நிலை உருவாகும். இல்லையெனில் அரசுப் பள்ளிகளை மூட வேண்டிய நிலைதான் ஏற்படும். நாமக்கல் மாவட்டத்தில் மாணவர் வருகையே இல்லாத காரணத்தால் கடந்த மாதம் அரசுத் தொடக்கப்பள்ளி ஒன்று மூடப்பட்டது. இதுபோன்ற நிலைமையைத் தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment