Powered By Blogger

Thursday, July 1, 2010

செலவு மட்டும் 264 கோடி

கோவை: செம்மொழி மாநாட்டுக்கு முன்பாக, கோவை நகரில் துவக்கப்பட்டு, அரை குறையாக உள்ள அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டுமென்று பரவலான கோரிக்கை எழுந்துள்ளது.


கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக, கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், ஏராளமான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒட்டு மொத்தமாக, மாநில அரசுத்துறைகளின் சார்பில் மட்டும் 263 கோடி ரூபாய்க்கு மேம்பாட்டுப் பணிகள் நடந்துள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். தேசிய நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே துறை மற்றும் விமான நிலைய ஆணையம் சார்பில், நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் சாலை விரிவாக்கம், ரயில் நிலைய மேம்பாடு, விமான நிலைய மேம்பாட்டுப் பணிகள் நடந்துள்ளன. இந்தப் பணிகளில், மாநில நெடுஞ்சாலைத்துறைப் பணிகள் மட்டுமே, முற்றிலுமாக முடிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி, தேசிய நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே துறை மற்றும் விமான நிலைய ஆணையம் என பல்வேறு துறைகளும் மேற்கொண்ட பணிகள், இன்னும் முழுமை பெறவில்லை.


தேசிய நெடுஞ்சாலையைப் பொறுத்தவரை, குறைந்தபட்சம் திருச்சி சாலை விரிவாக்கப் பணிகளை முடிக்க வேண்டுமென்பதற்காக, பகீரத பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல, கோவை அரசு மருத்துவமனை வரையிலான சாலை, பெருமளவில் அகலப்படுத்தப்பட்டது. மாநாட்டுக்காகவே, மேட்டுப்பாளையம் சாலையை அகலப்படுத்தும் பணியைத் துவக்காமல் தேசிய நெடுஞ்சாலைத்துறை நிறுத்தி வைத்திருந்தது. விரைவில் அங்கு மரங்களை வெட்டும் பணி துவங்குமென்று தேசிய நெடுஞ்சாலைத்துறைப் பொறியாளர்கள் தெரிவித்தனர். செம்மொழி மாநாட்டையொட்டி வடகோவை, போத்தனூர் ரயில் நிலையங்களில் திட்டமிடப்பட்டிருந்த எந்தப் பணியுமே நடக்கவில்லை. கோவை ரயில் நிலையத்தில், முக்கிய பிரமுகர்களின் வாகனங்களுக்கு மாற்று வழி ஏற்படுத்தும் திட்டமும் இறுதி வரை நிறைவேற்றப்படவில்லை. அங்கு கூடுதல் சுரங்க நடைபாதை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளும் துவக்கப்பட வேண்டியுள்ளன. விமான நிலைய மேம்பாட்டுப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டாலும், இன்னும் சிறுசிறு பணிகள் மீதமிருப்பதாகத் தெரிகிறது. அதோடு மாநகராட்சிப் பணிகளும் மிச்சமுள்ளன.


கோவை நகரில், அவிநாசி சாலை, திருச்சி சாலை, ஸ்டேட் வங்கிச் சாலை, காமராசர் சாலை, பாரதியார் சாலை, வ.உ.சி., பூங்கா சாலை உட்பட நகரின் பல்வேறு சாலைகளில் கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில், புதிதாக நடைபாதைகள், சிறு பூங்காக்களும் அமைக்கப்பட்டன. ஆனால், அவையனைத்துமே அரை குறையாக, இடைவெளி விட்டு காணப்படுகின்றன. ரயில் நிலையம் முன்பாக, நடைபாதைக்கான தளமே அமைக்கப்படவில்லை. இதே சாலையில், பல இடங்களில் நடைபாதையில் பதிக்கும் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, குட்ஷெட் சாலையில் உள்ள சாக்கடையின் மீது மூடி அமைத்து, அதை நடைபாதையாகவும், "பார்க்கிங்' பகுதியாகவும் மக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்று வரையிலும் அந்த வேலையும் நடக்கவில்லை.


செம்மொழிப் பூங்கா என்ற பெயரில், புதிதாக அமைக்கப்பட்ட பூங்காக்களில் அவசர கதியில் வைக்கப்பட்ட செயற்கைப் புல்வெளிகள், மரங்கள் காய்ந்து கருகியுள்ளன. அவற்றை முழுமையாகப் பராமரிக்கும் நடவடிக்கையும் இல்லை. மாநாட்டுக்காக சிறப்பாக உழைத்து, பல லட்சம் மக்கள் பயன் படுத்திய குப்பைகளை உடனுக்குடன் அகற்றி, தூய்மைப் புரட்சி செய்த மாநகராட்சி நிர்வாகம், எஞ்சியுள்ள வேலைகளையும் சீக்கிரமாக முடித்தால் செம்மொழி மாநாட்டின் நினைவு, கோவை மக்களிடம் என்றென்றும் பசுமையாக இருக்கும்.


நிழற்குடைகளில் வெயில்: மாநகராட்சி நிர்வாகத்தால், கோவை நகரில் நிறுவப்பட்ட நிழற்குடைகளை ஆய்வு செய்த துணை முதல்வர் ஸ்டாலின், கூரையின் பரப்பை நீட்டிக்குமாறு அறிவுறுத்திச் சென்றார். ஆனால், அவர் குறிப்பிட்டுக் காட்டிய அனைத்து நிழற்குடைகளும், துணை முதல்வர் சொன்ன அளவில் பயணிகளுக்குபயனுள்ளபடி மாறவில்லை. இதனால், உள்ளே நின்றாலும் வெயில் அடிக்கிறது. மழை பெய்தாலும் பயணிகள் நனையும் நிலை உள்ளது.

No comments:

Post a Comment