Powered By Blogger

Tuesday, July 20, 2010

எங்கே போனது பாசம்?

‘பெத்த மனசு பித்து; பிள்ளை மனசு கல்லு’’ என்று பெற்றோர் & பிள்ளைகள் உறவு பற்றி பேசப்படும் பழமொழிகள் நிறைய உண்டு. Ôதென்னைய வச்சா இளநீரு... புள்ளையை பெத்தா கண்ணீரு...’ என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் இப்போதும் ஒலிப்பது உண்டு. பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை இப்படி புலம்ப விடும் பிள்ளைகளை தண்டிக்க சட்டமே வந்து விட்டது. சட்டத்தின் கீழ் நிறைய பேர் தண்டிக்கப்படும் நிலையும் தொடங்கி விட்டது. ஆனாலும், சமூகத்தில் இந்த குற்றம் சத்தமின்றி தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதிலும் குடும்பம், உறவு, பாசம் என பக்கம் பக்கமாக வசனம் பேசும் தமிழகம் தான் பெற்றோரை கைவிடும் பிள்ளைகளை அதிகம் கொண்ட மாநிலங்களில் முதலிடமாம். அதிலும் தலைநகர் சென்னை தனியிடம் பிடித்திருக்கிறது.
சமீபத்தில் 104 வயது முதியவர் ஒருவர், மகனிடம் கருணை கேட்டு நீதிமன்றம் வந்திருக்கிறார் என்ற செய்தி ஒன்று போதும், பெற்றோர் & பிள்ளை உறவை சொல்ல. ஏன் இந்த நிலை? என்ன காரணம்?
கூட்டுக் குடும்ப முறை குறைந்து போனது தான் காரணமா? இல்லை, பிள்ளைகளை வளர்க்கும் முறையில் வந்த கோளாறா? எந்திரத்தனமான வாழ்க்கை என்பதால் தொலைந்து போனதோ பாசம்? எது காரணமோ தெரியவில்லை. ஆனால், ஊர்தோறும் வந்து விட்டது முதியோர் இல்லங்கள், நாகரீகத்தின் அடையாளமாக.
பிள்ளைகளை பெற்று பேணிக்காத்து, படிக்க வைத்து, வேலையும் வாங்கி கொடுத்து கல்யாணமும் செய்து வைக்கிறார்கள். ஆனால் அந்த பிள்ளைகள் சேர்ந்து 2 பேரை அதாவது பெற்றோரை கவனிக்க மனசில்லாமல் விட்டு விடுகின்றனர்.
உழைக்கும் போது இருந்த மரியாதையும், கவனிப்பும் ஓய்வு பெற்று உட்கார்ந்திருக்கும் பெற்றோர்களுக்கு கிடைப்பதில்லை. பெற்றப் பிள்ளைகள் மட்டுமின்றி பேரப் பிள்ளைகளாலும் பெரியவர்களுக்கு மரியாதை குறைவு. இப்படி மனம் புழுங்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை ஏராளம்.
‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று சொல்லி பழக்கப்பட்ட பூமி. ஆனால், அன்பும், பாசமும் அற்றுப் போய் விட்டதாலோ என்னவோ, அந்த முதல் தெய்வங்கள் இன்றைக்கு முதியோர் இல்லங்களில் தான் அடைக்கலம் கொண்டுள்ளன.

வயசாயிட்டா ம னம் இருக்காதா?

விருத்தம்மாள்(80):

எனக்கு குழந்தை இல்லை. பெற்றால்தான் பிள்ளையா? இந்த இல்லத்தில் இருக்கிறவங்க எல்லாம் என் பிள்ளைங்கதான்.
மேரி(75):
திருவள்ளூர் பெரியகுப்பம் எங்க ஊரு. வீட்டுக்காரர் கொத்தனாரு. பையனுங்க 5, ஒரு பொண்ணு. அவரு 16 வருஷத்திற்கு முன்னாடி பாண்டிச்சேரியில இருக்கிற தம்பி வீட்டுக்கு போய் செட்டிலாயிட்டார். பையன் வீட்ல இருந்தேன். அவன் போன பிறகு மெட்ராசில் இருக்கும் மகள் வீட்டுக்கு வந்தேன். வயசாயிட்டா மானம் இருக்காதா? அப்புறம் வீட்டு வேல செஞ்சேன். வயாசவுறத பாத்த அந்த வீட்டுக்காரங்க இங்க கொணாந்து சேத்தாங்க.

டி.குமார்(71):

சொந்த ஊர் கும்பகோணம். சமையல் செய்வேன். வடபழனியில் ஒரு ஓட்டலில் வேலை செய்தேன். 2 பிள்ளைகளுடன் தனிமரமாய் தவித்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டேன். எங்களுக்கு ஒரு பெண். 3 பிள்ளைகளையும் என் பிள்ளைகளாகவே வளர்த்தேன். எல்லோருக்கும் கல்யாணம் ஆகியவிட்டது. இளமை இருக்கும் வரை வாழ்க்கை நன்றாக போனது. வயசான பிறகு யாரும் கண்டுக்கவில்லை. எல்லாவற்றுக்கும் பிள்ளைகளின் கையை எதிர்பார்க்க வேண்டிய நிலை. மனைவியும் கண்டுகொள்ளவில்லை. இங்கு வந்துவிட்டேன். யாரும் வந்து பார்ப்பதில்லை. பேரப் பிள்ளைகள் நினைவுகள்தான் இருக்கு. இங்குள்ளவர்களிடம் பேசிப் பழகும் போது கவலைகள் காணமாமல் போய் விடுகிறது .
பால் ஜெகதீஷ்(78):

கோவை சொந்த ஊர். இந்தியாவின முதல் நிதி அமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் மகள் வயிற்றுப் பேரன் நான். நல்ல வசதி. படிப்போட எல்லா பழக்கத்தையும் கத்துக்கிட்டேன். பணமும் கரைஞ்சிடுச்சு. இளமை தந்த கர்வத்துல கல்யாணம் செய்துக்கலை. கொஞ்சம் திருந்தி செய்த வேலையிலும் காசுக்கு முக்கியத்துவம் தரவில்லை. அம்மா இருந்தவரைக்கும் கஷ்டம் தெரியவில்லை. வயசானதும் இங்க வந்துட்டேன். சொந்தக்காரங்க பார்த்துக்க தயார். என் புத்திக்கு அது ஒத்து வராது. வயாசாயிட்ட முதியோர் இல்லங்கள்தான் பெஸ்ட். அதை விட்டு விட்டு பிள்ளைங்களை கஷ்டப்படுத்திக்கிட்டு அவங்க கூடவே இருக்க கூடாது. அவங்களுக்கு ஆயிரம் வேலைகள். அதோட கூடுதலாக நம்மையும் கவனிக்கிற வேலையை செய்ய விடக் கூடாது. அது அவங்க முன்னேற்றத்தை, மகிழ்ச்சியை முடக்கி விடும்.

வறுமையில் 5 கோடி முதியோர்

Ô100 கோடியை கடந்த மக்கள் தொகையில் சுமார் 8.1 கோடி பேர் 60 வயதை கடந்த முதியவர்கள்Õ என்று சொல்கிறது முதியோர்களுக்கான தொண்டு நிறுவனமான ஹெல்பேஜ் இந்தியா. இதன் தேசிய இயக்குனர் இந்த்ராணி ராஜதுரை, Ô‘முதியோர்களின் எண்ணிக்கை இன்னும் 10 ஆண்டுகளில் 13.5 கோடியாக இருக்கும். இப்போது இருக்கும் 8.1 கோடியில் 5.1 கோடி முதியவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள். முதியவர்களில் 70 சதவீதம் பேர் படிப்பறிவு இல்லாதவர்கள். தென்னிந்தியாவில் இருக்கும் முதியவர்களில் 82 சதவீதம் பேர் போதிய ஆதரவு இல்லாத நிலையில் இருக்கின்றனர். அதேபோல் 87 சதவீதத்தினர் தொடர் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள்.

80 சதவீதத்தினர் ஓய்வூதியம் உட்பட எந்த வருவாயும் இல்லாதவர்கள். வயதானவர்களில் 60 சதவீதத்தினர் சட்ட உரிமைகள் உட்பட எந்த விவரத்தையும் அறியாதவர்கள். 52 சதவீத முதியவர்கள், தங்கள் வாரிசுகளால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள். இதில் கொடுமையான விஷயம் 40 சதவீத முதியவர்கள், கட்டாயம் வேலைக்கு சென்று பிழைக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் 70 வயதை கடந்தவர்கள்Õ’ என்று புள்ளிவிவரங்களை அடுக்குகிறார்.

தமிழகத்திற்கே முதலிடம்

வயதான காலத்தில் பெற்றோரை தவிக்க விடுவதும், புலம்ப விடுவதும், இன்றைய நாகரீக உலகில் இயல்பாகி விட்டது. அதற்கு அடையாளமாகி இருப்பது பழைமையும், பெருமையும், பண்பாட்டையும் பேசும் தமிழ்நாடு என்பது அதிர்ச்சிக்கரமான விஷயம். பெற்றோரை சரியாக கவனிக்காத மாநிலத்தில் முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடுதான். தமிழகத்தில் முதலிடத்தில் இருப்பது சென்னை.

சமீபத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில்தான் இந்த உண்மைகள் வெளியாகி உள்ளன. சென்னையில் 52.7 சதவீத பிள்ளைகளே பெற்றோரை அன்பாக கவனிக்கின்றனர். டெல்லி பிள்ளைகள் பரவாயில்லை. அங்கு 80 சதவீதம் பேர் தங்கள் பெற்றோரை பேணிக்காக்கின்றனர்.

பெருநகரங்களை விட பொதுவாக கிராமங்களில் பெற்றோரை நன்றாக பார்த்துக் கொள்கின்றனர். ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை நிலவுகிறது. அதில் பெரியவர்களுக்குதான் முக்கியத்துவம். அவர்களை கேட்டுதான் எந்த முடிவும் எடுக்கும் பழக்கம் இருக்கிறது. அங்கிருந்து இங்கே இடம் பெயர்ந்த மார்வாடிகள் பலரும் கூட்டு குடும்பமாகதான் வாழ்கிறார்கள்.

54 வயது மகன் மீது புகார் கொடுத்த 104 வயது தந்தை

பெற்றவர்களை வயதான காலத்தில் பாதுகாத்து பராமரிக்க வேண்டியது பிள்ளைகளின் கடமையாகும். இதிகாசங்கள் மட்டுமல்ல; உச்ச நீதிமன்றமும் இதை சொல்லியுள்ளது. உச்சகட்டமாக வளர்ப்பு பிள்ளைகளுக்கும் பெற்றோரை பாராமரிக்கும் பாதுகாக்கும் பொறுப்பு உண்டு என்றும் சில வாரங்களுக்கு முன் தீர்ப்பு சொல்லியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளை தண்டிக்கும் சட்டமும் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் 104 வயது பெரியவர் ஒருவர் கொடுத்த புகாரின் பெயரில் 54 வயது மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்தது. புளியந்தோப்பைச் சேர்ந்தவர் கன்னியப்பன்(104). இவர்தான் மகன் தங்கராஜ் மீது புகார் கொடுத்தவர். கன்னியப்பனின் கடைசி மகன் தங்கராஜ். முதல் மகன் ஜெயசந்திரன் ஏற்கனவே இறந்து விட்டார். பாஸ்டராக இருக்கும் இன்னொரு மகன் டேனியல், ஆயிரம் விளக்கு பகுதியில் தனியாகத்தான் வசித்து வருகிறார். கன்னியப்பன் வீட்டில் இப்போது தங்கராஜ் வசித்து வருகிறார்.

கைது செய்யப்பட்ட மகன், Ôநான் வேலைக்கு ஏதும் செல்வதில்லை. என் பையன்தான எனக்கு சோறு போடுகிறான். இதில் எனது அப்பாவை எங்கே கவனிப்பது?Õ என்கிறார். ஆனால் தனது மாமனாரை தன் வீட்டிலேயே வைத்து கவனித்துக் கொண்டு இருக்கிறார். தன்னை தன் பிள்ளை காப்பாற்றுவதாக சொல்பவர், தன் தந்தையை காக்க வேண்டும் என்பதை மறந்தது ஏன்?

அதிகரிக்க என்ன காரணம்?

சாவித்திரி வைத்தி (விஷ்ராந்தி முதியோர் காப்பகம்):

இனி முதியோர் இல்லங்கள் குறைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. பிறப்பு குறைகிறது. முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஒரு குடும்பம் ஒரு பிள்ளை என்ற கொள்கையும் இதற்கு காரணம். முன்பு நான்கைந்து பிள்ளைகள் இருப்பார்கள் ஒருவர் இல்லாவிட்டால், ஒருவர் பார்த்துக் கொள்வார் என்ற நிலை இருந்தது.
அந்த காலத்தில் விவசாயம் முக்கிய தொழில். ஊரை விட்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. கூட்டு குடும்ப வாழ்க்கை இருந்தது. கூட்டுக் குடும்பங்களில் எப்போதும் முதியவர்களுக்கு மரியாதை அதிகம். இப்போது அப்படி இல்லை. விளைச்சல் குறைந்து விட்டது. பிழைப்புக்காக வெளியூர் செல்ல வேண்டிய நிலை. படிப்பு, பணி காரணமாக ஆண், பெண் என இரண்டு தரப்பும் வெளியூருக்கு செல்லகின்றனர். அதனால் வீட்டில் இருக்கும் பெரியவர்களை கவனிப்பது இயலாத விஷயமாகி வருகிறது. அதுமட்டுமல்ல சில பெற்றோர்களே விரும்பி முதியோர் இல்லங்களில் சேருகின்றனர். காரணம் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் கவனிக்காதது மட்டுமில்லை. அவர்கள் போடும் கட்டுபாடுகளும் முதியோர்களுக்கு பிடிப்பதில்லை. அதேபோல் வீட்டிலுள்ள இடநெருக்கடி பிள்ளைகளுக்கு தொந்தரவாக இருக்கும் என்பதையும் சில முதியோர் காரணங்களாக சொல்கின்றனர். முதியோர் இல்லங்கள் அதிகமாகி வருவது நமது பண்பாட்டுக்கும், பழக்க வழக்கத்திற்கும் மாறானது என்றாலும், அதிகமாகி வருவதை தவிர்க்க முடியாது.

தமிழகத்தில்...

மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007 எனும் சட்டம் தமிழகத்தில் 2008 முதல் அமல்படுப்படுகிறது. 2001 கணக்குப்படி தமிழகத்தில் 55.07 லட்சம் முதியோர் உள்ளனர். இந்த 10 ஆண்டுகளில் அது 10 முதல் 20 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

முதியோர் இல்லங்கள் நடத்த மாநில அரசு நிதியுதவி செய்கிறது. அரசு மானியம் பெற்ற 27 இல்லங்களும், மத்திய அரசு மானியத்துடன் 49 இல்லங்களும் உள்ளன. ஒரு இல்லத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.2 லட்சம் மாநில அரசு மானியம் தரப்படுகிறது. 2009&10ல் ரூ.60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ம் தேதி முதியோர் தின விழா கொண்டாடப்படுகிறது.

முதன்முதலாக ஸ்ரீபெரும்புதூர் அருகே திண்டல் கழனி என்ற கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பில் மாநில அரசின் சார்பில் முதியோர் இல்லம் கட்டப்படுகிறது. 160 பேர் அங்கு தங்கலாம். இதுதவிர 60 வயதுக்கு மேற்பட்ட வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள ஆதரவற்ற முதியோருக்கு மாநில அரசின் சார்பில் நிதியுதவித் தொகை வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment