ஆங்கில பாடத்திற்கு பதில் ஆபாச படம் : பயிற்சி "டிவிடி' யில் உல்லாச காட்சிகள்
சிங்கம்புணரி : சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பள்ளியில், மாணவர்களின் ஆங்கில திறன் வளர்ப்பதற்காக வழங்கப்பட்ட "டிவிடி' யில், ஆபாச படம் ஓடியது. இதனால், தென்மாவட்ட அளவில் "டிவிடி' க்களை திரும்ப பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 1,200 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இம்மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு, எழுத்து திறனை வளர்க்கும் நோக்கில், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், "டிவிடி' க்கள், நேற்று வழங்கப்பட்டன. ஒரு ஒன்றியத்திற்கு 40 முதல் 70 வீதம், 1,500 "டிவிடி' க்கள் வினியோகிக்கப்பட்டன. எஸ்.புதூர் ஒன்றியத்தை சேர்ந்த ஒரு பள்ளியில் "டிவிடி' யை பார்த்த போது, நடிகை ஷகிலா நடித்த "பலான' காட்சிகள் ஓடின. அதிர்ச்சியான ஆசிரியர்கள், "டிவிடி பிளேயரை', நிறுத்தினர். இத்தகவல் மற்ற பள்ளிகளில் பரவியது.சம்பவம் குறித்த அப்பள்ளி தலைமை ஆசிரியர், அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் நடராஜனிடம் தெரிவித்தார். மாவட்டம் முழுவதும் வழங்கப்பட்ட "டிவிடி' க்களை திரும்ப பெறுமாறு, வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, அவர் உத்தரவிட்டார். நேற்று மாலை வரை அவற்றை திரும்ப பெறும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். இச்சம்பவம் மாவட்ட அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தகவல்கள் சென்னையில் உள்ள திட்ட இயக்குனர் வெங்கடேசனுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment