Powered By Blogger

Tuesday, June 29, 2010

35 ஆண்டுகளுக்கு முன் நடந்த அபாயம்...

கடந்த ஜூன் 25, 1975ம் ஆண்டு நள்ளிரவு, ஒரே உத்தரவில் இந்திரா, "நாட்டின் விடுதலை விடியலில் மக்களின் சுதந்திர செயல்பாடும், ஜனநாயக உரிமைகளும் பாதுகாக்கப்படும்' என்று அவரது தந்தை நேரு, நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை தகர்த்தெறிந்தார்.


இருபத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன் அவர் அறிவித்த உள்நாட்டு அவசர நிலை பிரகடனம், 21 மாதங்களுக்கு நீடித்தது. அந்த காலகட்டம், சுதந்திரத்திற்கு பிறகு நாடு சந்தித்த மிக மோசமான காலம்.நாட்டின் முதலாவது பிரதமர் ஜவகர்லால் நேரு, "நாட்டு மக்களுக்கு ஆற்றிய தொலைநோக்கும், விவேகமும், அனைத்து இந்தியர்களின் சுதந்திரப் பெருமை பாதுகாக்கப்படும்' என்று நாடு சுதந்திரம் பெற்ற போது கூறிய உறுதிமொழி மறக்க முடியாதது. அதற்கு 28 ஆண்டுகளுக்கு பிறகு, அவரது மகள் இந்திரா, சுதந்திரத்தைப் பறித்து, உள்நாட்டில் அவசர நிலையை பிறப்பித்து, உத்தரவிட்டது அதிர்ச்சியான சம்பவம்.


அவப்பெயர் சம்பாதித்த, அவசர நிலை பிரகடனம் அமலான ஒரு மாதத்திற்கு பிறகு, ஜூலை 22ம் தேதி, பார்லிமென்டில் பேசிய இந்திரா, "நான் சர்வாதிகாரியாக இல்லாத போது, என்னை அப்படி அழைத்தீர்கள்; இப்போது நான் உண்மையில் சர்வாதிகாரி' எனக் கூறினார். அதுகுறித்த செய்தியை, "பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா' சேகரித்ததும் சென்சார் அதிகாரி அதற்கு அனுமதி மறுத்து, செய்தியை புதைத்தது வரலாறு.ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில், அவர் லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை தடை செய்து, ஜூன் 1975ல் அலகாபாத் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவையடுத்து, இந்திராவுக்கு உண்மையில் பிரச்னை ஏற்பட்டது. 1971ம் ஆண்டு நடந்த தேர்தலில், உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் இந்திராவை எதிர்த்து போட்டியிட்டு தோற்ற சோஷலிச தலைவர் ராஜ் நாராயண் தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பால், உருவான விளைவு இது.


எனினும், அதே ஆண்டு ஜூன் 24ம் தேதி, ஐகோர்ட் உத்தரவுக்கு நிபந்தனையோடு கூடிய தடை விதித்த சுப்ரீம் கோர்ட், லோக்சபாவில் நடைபெறும் விவாதங்களில் பங்கு பெறவும், ஓட்டளிக்கவும் இந்திராவுக்கு உள்ள உரிமையை அளிக்க மறுத்தது.சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு பிறகு, தேசம் முழுவதும் ஒரே கொந்தளிப்பு. ஊழலுக்கு எதிராக ஜெயபிரகாஷ் நாராயணன் துவக்கிய, "முழுமைப் புரட்சி' இயக்கத்தில் நம்பிக்கை கொண்ட எதிர்க்கட்சிகள், பார்லிமென்டில் இந்திராவை குறி வைத்து செயல்பட்டன. அவர் பதவி விலகக் கோரி, தினம் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.அதன் உச்ச கட்டமாக ஜூன் 24ம் தேதி, நிறைய அரசியல் நடவடிக்கைகள்... எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உணர்வுபூர்வமான உரைகளை வெளியிட்டனர்.


அதற்கு ஒரு சான்றாக, "ஆட்சி செய்யும் தார்மீக உரிமையை இந்திரா தலைமையிலான அரசு இழந்துவிட்டது; இந்த அரசிடமிருந்து ராணுவம் ஆணை பெற அவசியமில்லை' என்று ஜெ.பி., கூறினார்.கலவரத்தை தூண்டும் விதமாக ஜெ.பி.,யின் பேச்சு அமைந்துள்ளதாகக் கூறிய இந்திராவும், அவரது கூட்டாளிகளும், அதை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முயன்றனர். அப்போதைய மேற்கு வங்க முதல்வர் சித்தார்த் சங்கர் ரே, அரசில் முக்கிய இடம்பெறாத சஞ்சய் ஆகியோருடன் இணைந்து, இந்திரா நடத்திய ரகசிய கூட்டத்தில், அவசர நிலையை அமல்படுத்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் இந்த முடிவுக்கு சாதகமாக கிடைக்கவில்லை என்ற போதிலும், அப்போதைய ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது, அவசர நிலை பிரகடனத்திற்கு ஒப்புதலை அளித்தார்.


நாடு முழுவதும், அரசியல் தலைவர்களும், தொண்டர்களும் நூற்றுக்கணக்கில் கைதாயினர்; ஜெ.பி., சிறையில் அடைக்கப்பட்டார். பத்திரிகைகளின் சுதந்திரம் பறிக்கப்படாத நிலையில், நடக்கும் நிகழ்வுகள் பற்றி நாளேடுகள் பிரசுரித்தன.அகில இந்திய வானொலியும் கூட அவசர நிலை குறித்த செய்தியை வெளியிட்டது. அந்த காலகட்டத்தில் நான், மும்பையில் பி.டி.ஐ., செய்தி நிறுவனத்தின் நிருபராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். ஜூன் 26ம் தேதி காலை, அலுவலகத்திற்கு செல்லும் வழியில் ஜனசங்க தொண்டர்கள், ரயில் நிலையங்களில் நடத்திய ஆர்ப்பாட்டங்களை பார்த்தேன்.அலுவலகத்தில், மூத்த பத்திரிகையாளர்கள் நடக்கும் நிகழ்வுகளையும், கைதாகும் முன் எதிர்க்கட்சித் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகளையும், டில்லியில் இருந்து வரும் செய்திகளையும், சில பிரபலமானவர்களின் கருத்துக்களையும் ஆராய்ந்தபடி இருந்தனர். அவசர நிலை அறிவிப்பை நியாயப்படுத்தும் அரசின் அறிக்கைகளும் வெளியாயின. அந்த நேரத்தில் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்படவில்லை.


ஆனால், திடீரென டில்லி - மும்பை டெலி பிரின்டர் இணைப்பில் பிரச்னை ஏற்பட்டு, அது நின்று போனது. போபால் வழியாக டில்லியிலிருந்து செய்தி வந்து கொண்டிருந்தது; விரைவில் அதுவும் நின்று போனது. டெலி பிரின்டரின் அச்சடிக்கும் இயந்திர சத்தம் விரைவில் அமைதியானது; மயான அமைதி.திடீரென டில்லி - மும்பை டெலி பிரின்டர் இணைப்பு உயிர் பெற்று, "செய்தி அனுப்பும் அனைத்து வேலையையும் நிறுத்தி விடவும்; விவரங்கள் தொடரும்' என்று தலைமை ஆசிரியர் சக்ரவர்த்தி ராகவன் அவசரமாக செய்தி அனுப்பினார். ஏதோ மோசமான விளைவு என்பதை சொல்லாமல் சொன்ன அறிவிப்பு. திரும்பவும் அனைத்து இணைப்புகளும் செயலிழந்தன.பதற்றமான சில மணி துளிகளுக்குப் பிறகு, மீண்டும் ஒரு டெலி பிரின்டர் செய்தி.


"பத்திரிகைகளின் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் ஊடகங்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது' என்ற அறிவிப்பு. அனைத்து செய்திகளையும் வெளியிடும் முன், டில்லிக்கு அனுப்பி அனுமதி பெற வேண்டும் என்ற தகவலும் தொடர்ந்தது.மாநில அளவில் செய்திகளை ஆராய்ந்து அனுமதி தரும் அலுவலர்கள் நியமிக்கப்படும் வரை, டில்லியிலிருந்து அனுமதி பெறுமாறு வழிகாட்டு நடைமுறைகள் அனுப்பப்பட்டன. ஒருநாள் கழித்த பிறகு, மும்பைக்கான சென்சார் அதிகாரி நியமிக்கப்பட்டார். இருந்தும், நகரத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் செய்தியாளர்கள் சேகரித்தனர். ஆனால், இது அடுத்த நாள் நாளேடுகளில் வெளிவராது என்று எங்களுக்கு தெரியும். அவசர நிலை பிரகடனத்திற்கு சில மணி நேரத்திற்கு பிறகு, தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதும், கண்காணிப்பு நடவடிக்கைகளும் ஆரம்பமாகாத நிலையில் இது நடந்தது.நிலைமையின் தீவிரத்தை ஆழமாக உணர, அடுத்த இரண்டு நாட்களானது. அந்தக் காலம் இனி ஒரு போதும் இந்தியாவுக்கு வரக்கூடாது.

No comments:

Post a Comment