கோவை:""உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக நேரடிச் செலவாக 68 கோடி ரூபாய் செலவாகி உள்ளது,'' என்று, முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
கோவையில் நிருபர்களுக்கு நேற்று அவர் அளித்த பேட்டி:உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் துவக்கவிழாவான, ஜூன் 23 அன்று, பந்தலில் இருந்த மக்களின் எண்ணிக்கை இரண்டு லட்சம். அன்று மாலை நடந்த அலங்கார ஊர்திகளின் எழிலார் பவனியை, சாலையின் இரு புறமும் நின்று கண்டு களித்தோரின் எண்ணிக்கை ஐந்து லட்சம்.ஜூன் 24 முதல் 26 வரை, மாநாட்டுப் பந்தலில் நடந்த கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகளில் தினமும் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர். பொதுக்கண்காட்சியை மணிக்கு 3,000லிருந்து 4,000 பேர் வரை பார்வையிட்டனர். நான்கு நாட்களில், ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலரில், 129 கட்டுரைகளும், 34 கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.
மாநாட்டில் கலந்து கொண்ட அறிஞர்கள் 3,100 பேருக்கு சிறப்பு மலர் வழங்கப்பட்டன. மக்கள் 2,300 பேர், விலை கொடுத்து வாங்கியுள்ளனர். பல்வேறு ஏடுகளின் சார்பில் வெளியிடப்பட்ட மலர்கள், கணக்கில் கொள்ளப்படவில்லை.தமிழ் இணைய மாநாட்டில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை 110. மாநாட்டில் பதிவு பெற்று பங்கேற்றவர்கள் 300 பேர். தமிழ் ஆய்வரங்கத்தில் பங்கேற்ற 200 பேரையும் சேர்த்து இம்மாநாட்டில் 500 தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர். இணைய மாநாடு சிறப்பு மலரில், 130 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
பொதுக்கண்காட்சிக்கு வந்த மக்களில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தினமும் இணைய கண்காட்சியையும் பார்வையிட்டனர். தினமும் ஒரு முகப்பரங்கம் என்ற அளவில் நடந்த நான்கு முகப்பரங்கங்களில், ஒவ்வொன்றிலும் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அரசால் மானியம் வழங்கப்பட்ட உணவுக் கூடங்களில், நான்கு லட்சம் பேருக்கு 30 ரூபாய்க்கு சலுகை விலையில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. வெளிநாட்டு, உள்நாட்டு அறிஞர்கள் உள்ளிட்ட விருந்தினர்கள் 2,605 பேர், 92 ஓட்டல்களில் உள்ள 1,642 அறைகளில் தங்கியிருந்தனர்.
மாநாட்டுக்கான ஏற்பாடுகளுக்காக நேரடிச் செலவாக 68 கோடி ரூபாய் செலவானது. இந்த மாநாட்டையொட்டி, கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், புதிய சாலைகள், இணைப்புச்சாலைகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புக்கு 243 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.மாநாட்டின் முக்கிய நிகழ்வாக நடந்த ஆய்வரங்கங்களில், 239 அமர்வுகளில் 55 பொருண்மைகளில் 913 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. மாநாட்டுக்காக, 50 வெளிநாடுகளில் இருந்து 840 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் கட்டுரை தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே 152.இலங்கையிலிருந்து 38, மலேசியாவிலிருந்து 23, சிங்கப்பூரிலிருந்து 22, அமெரிக்காவிலிருந்து 14, கனடாவிலிருந்து 11, இங்கிலாந்திலிருந்து 9, ஜெர்மனியிலிருந்து 5, ஆஸ்திரேலியாவிலிருந்து 4, மொரீஷியசிலிருந்து 3 என்ற எண்ணிக்கையில் அறிஞர்கள் வந்து கட்டுரை சமர்ப்பித்தனர்.
இவற்றைத் தவிர்த்து, பிரான்ஸ், சீனா, செக் குடியரசு, ஹாங்காங், கிரீஸ், நெதர்லாந்து, பின்லாந்து, ஜப்பான், நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா நாடுகளிலிருந்தும் தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இங்கு வந்து, கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தனர்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.பேட்டியின்போது, தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கனிமொழி எம்.பி., மாநாட்டு சிறப்பு அலுவலர் அலாவுதீன், மாவட்ட ஆட்சியர் உமாநாத், கோவை மேயர் வெங்கடாசலம், மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு உட்பட பலர் உடனிருந்தனர்.
பட்டியலும், பாராட்டும்:நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பின்போது, முதல்வர் கருணாநிதி மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டார். பேட்டியைத் துவக்கும் முன், அனைத்து பத்திரிகையாளர்களையும் பார்த்து கை கூப்பி வணக்கம் தெரிவித்த முதல்வர், "வணக்கம், வாழ்த்துக்கள், நன்றி' என்றார்.
ஜனாதிபதி, கவர்னர், மத்திய அமைச்சர்கள் துவங்கி, மாநாட்டுப் பந்தல் அமைத்த பந்தல் சிவா வரையிலும் நீளமாக பெயர்ப் பட்டியலை வாசித்து, அத்தனை பேருக்கும் தன் நன்றியைத் தெரிவித்தார் முதல்வர். குறிப்பாக, காவல்துறையினருக்கு நன்றி கூறிய அவர், ""சிறு பிரச்னை கூட எழாத அளவுக்கு 11 ஆயிரம் பேரைக்கொண்டு பாதுகாப்புப் பணியைச் சிறப்பாகச் செய்ததற்காக காவல்துறையினர் அனைவருக்கும் நன்றி,'' என்றார்.
சிறப்பாக நன்றிக்குரியவர்கள் என்று பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினரைக் குறிப்பிட்டு புன்னகைத்தார். எல்லாரையும் விட, அமைதியோடும், மகிழ்ச்சியோடும் இந்த மாநாட்டு நிகழ்வுகளில் பங்கேற்ற தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார் முதல்வர்.
No comments:
Post a Comment