லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களின் சம்பளம் பத்து ஆண்டுகளுக்கு முன் உயர்த்தப்பட்டது. அதன்பின் உயர்த்தப்படவில்லை. ஆனால், அரசு ஊழியர்களுக்கு ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைகள் 2006ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்துள்ளன. அதனால், எம்.பி.,க்களின் சம்பளத்தையும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.அதே நேரத்தில், லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியோ, "எம்.பி.,க்களின் சம்பளத்தை அவர்களே முடிவு செய்ய வேண்டியுள்ளதால், அது சரியாக இருக்காது. அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை முடிவு செய்ய சம்பளக் கமிஷன் அமைக்கப்படுவது போல, எம்.பி.,க்களின் சம்பளத்தை நிர்ணயிக்க கமிஷன் ஒன்றை அமைக்க வேண்டும்' என, வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் கடிதம் எழுதினார். ஆனால், "அதுபோன்ற ஒரு அமைப்பு முறையை உருவாக்குவதற்கான வாய்ப்பு இல்லை. இந்த விவகாரம் பற்றி பின்னர் பரிசீலிக்கப்படும்' என, அரசு தரப்பில் அவருக்கு பதில் அளிக்கப்பட்டது.இருந்தாலும், மற்ற சில நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்திய எம்.பி.,க்கள் குறைவான சம்பளம் பெறுகின்றனர். அது சரியல்ல. அதை மாற்றி அமைக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை என்றும் தெரிவித்தது.
ஒரு ரூபாய் அதிகம்: இந்த சூழ்நிலையில், எம்.பி.,க்களின் சம்பளத்தை தற்போதுள்ள 16 ஆயிரம் ரூபாயில் இருந்து 80 ஆயிரத்து ஒரு ரூபாயாக உயர்த்த வேண்டும் என, பார்லிமென்ட் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.இந்த சம்பளம் மத்திய அரசின் செயலர் பெறும் சம்பளத்தை விட ஒரு ரூபாய் அதிகம். காங்கிரஸ் எம்.பி., சரண் தாஸ் மகந்த் தலைமையிலான பார்லிமென்ட் கமிட்டி, "பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடக்கும் போது, எம்.பி.,க்களுக்கு வழங்கப்படும் தினசரி அலவன்சை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும். தொகுதி அலவன்ஸ் மற்றும் அலுவலகச் செலவுகள் அலவன்சை அதிகரிக்க வேண்டும். 34 முறை விமானத்தில் இலவசமாக பறக்க அனுமதிக்க வேண்டும்' என்றும் பரிந்துரை செய்துள்ளது.
No comments:
Post a Comment