தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள டோல் பிளாசாக்களில் சுங்க வரி கட்ட மறுத்து அரசியல் கட்சியினர் செய்யும் அடாவடிகளினால் ஒட்டு மொத்த சாலை மேம்பாட்டு திட்டங் களும் செயலற்று போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டோல் பிளாசாக்களில், கட்சிக் கொடிகளை கட்டிக்கொண்டு வாகனங்களில் செல்லும் தொண்டர்களின் அட்டகாசங்களை கட்சித் தலைமைகள் கண்டு கொள்ளாததே இதற்கு காரணம். டோல் பிளாசாக் களில் கட்டணம் செலுத்தாமல், கலவரம் செய்யும் அரசியல் கட்சி யினர் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் வரை நாட்டின் பெரும்பாலான முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் இருவழிச் சாலைகளாக, குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப் பட்டன. இச்சாலைகளை விரி வாக்கம் செய்யவும், புதுப்பிக்கவும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்ற நிலையில், போதிய நிதி ஆதாரம் இல்லாமல் அரசு தவித்து வந்தது.நாட்டில் மொத்தம் 10 ஆயிரம் கி.மீ., தூரத்திலான சாலைகள் தற் போது, தனியார் நிறுவனங்களின் பங்களிப்பில் நான்கு வழிச்சாலை களாகவும், ஆறுவழிச் சாலைகளா கவும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் எல் அண்டு டி, ரிலையன்ஸ் உள்ளிட்ட பல முன்னணி தனியார் நிறுவனங்கள், சாலை மேம்பாட்டிற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்தன. இத்திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சாலையை மேம்படுத்தும் பணி, அந்தந்த நிறுவனத்திடம் ஒப்படைக் கப்படும். சாலைப் பணிகள் முழுவதுமாக முடிந்து, பயன்பாட்டிற்கு வரும்போது, டோல் பிளாசாக்கள் அமைத்து, இலகுரக வாகனங்கள் முதல் டிரக்குகள் போன்ற கனரக வாகனங்கள் வரை சுங்கவரியை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், குறிப்பிட்ட காலம் வரை வசூலித்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு வசூலிக்கப்படும் தொகை, முன்னதாக முதலீடு செய்த தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு திரும்ப பெறுவதற்கும், மேம்படுத்தப்பட்ட சாலைகளை குறிப்பிட்ட காலத்திற்கு பராமரிப்பதற்கும், விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கு உதவுவது, தகவல் மையம், ரோந்து போன்ற பல்வேறு பணிகளுக்கும் பயன் படுத்தப்படும். கடந்த 2008ம் ஆண்டு மத்திய அமைச்சரவையால் திருத்தியமைக்கப்பட்ட சுங்கவரி கட்டணமாக கார், ஜீப் போன்ற வாகனங்களுக்கு ஒரு கி.மீ.,க்கு 65 பைசா வீதமும், இலகுரக கமர்ஷியல் வாகனங்களுக்கு ஒரு ரூபாய் 5 பைசா, பஸ், டிரக் போன்ற வாகனங்களுக்கு இரண்டு ரூபாய் 20 பைசா, கனரக இயந்திர வாகனங்களுக்கு 3 ரூபாய் 45 பைசா, கன்டெய்னர்களுக்கு 4 ரூபாய் 20 பைசா வீதமும் வசூலிக்கப்படுகின்றன. பல கட்டங்களாக கான்ட்ராக்ட் விடப்பட்டு, பணிகள் நடத்தப்பட்ட ஒரே தொடர் சாலைகளுக்கு தனித்தனியாக சுங்க வரி வசூலிக்கப்படுகிறது.
இம்முறை அமலுக்கு வந்த பின்னரே தமிழகம் மட்டுமல்லாது, நாட்டின் பல மாநிலங்களில் தரமான சாலைகள் கிடைத்துள்ளன. தமிழகத்தை பொறுத்தவரையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை, தமிழக சாலை மேம்பாட்டுக் கழகம் ஆகிய அரசு நிறுவனங்களும், எல் அண்டு டி, ரிலையன்ஸ், ஜி.எம். ஆர்., உள்ளிட்ட சில தனியார் நிறுவனங்களும், டோல் பிளாசாவை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற் றுள்ளன. சாலைகள் நல்ல நிலையில் இருப்பதால், இத்திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியிலும் நல்ல ஒத்துழைப்பு காணப்படுகிறது. டோல் பிளாசாக்களில் உள்ளூர் பொதுமக்களிடமும், இருசக்கர வாகன ஓட்டிகளிடமும் பணம் வசூலிக்கப்படுவதில்லை. காரில் செல்லும் வசதி படைத்தவர் களிடமும், வர்த்தக வாகனங் களிடமும் மட்டுமே பணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த வகையில் பொதுமக்கள் அனைவரும் டோல் பிளாசாக்களில் பணம் செலுத்திவிட்டு செல்லும் நிலையில், அரசியல் கட்சியினர் பணம் செலுத்த மறுப்பது, டோல் பிளாசா ஊழியர்களுடன் தகராறு செய்வது; அடிதடி ரகளை; துப்பாக்கி காட்டி மிரட்டுவது; வாகனங்களை ஏற்றி கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டுவது என அராஜகங் களை நிகழ்த்திக் கொண்டிருக் கின்றனர்.கடந்த சில மாதங்களில் சென்னை மற்றும் மாநிலத்தின் பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்களில் அரசியல் கட்சித் தொண்டர்களின் அட்டகாசம் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகிறது.
சென்னை, ராஜிவ்காந்தி சாலை, பெருங்குடியில் கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் டோல்கேட் அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு பெருங்குடி பேரூராட்சியில் கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பார்வையிடுவதற்காக, அப்போதைய தாம்பரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மதிவாணி, தாம்பரம் வருவாய் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் அரசு வாகனத்தில் சென்றனர். பெருங்குடி டோல்கேட்டிற்கு சென்ற தும், சுங்கவரி வசூலிப்பதற்காக தாசில்தார் சென்ற வாகனத்தை டோல்கேட் ஊழியர்கள் மடக்கினர். எந்த வாகனமாக இருந்தாலும் கட்டணம் செலுத்திவிட்டு தான் செல்ல வேண்டும் என டோல்கேட் ஊழியர்கள் கூறினர். இதனால், தகராறு ஏற்பட்டது. பெருங்குடி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி தி.மு.க., செயலர் ரவிச்சந்திரன் ஆகியோர் டோல்கேட் ஊழியர்களிடம் தகராறு செய்தனர். டோல்கேட் ஊழியர் தங்கவேல் என்பவர் துரைப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில், தாசில்தார் மற்றும் தி.மு.க., செயலர் ரவிச்சந்திரன் மீது புகார் கொடுத்தார். இதையறிந்த ரவிச்சந்திரனின் ஆதரவாளர்கள் டோல்கேட்டிற்கு சென்று, அங்கிருந்த டோல்பிளாசா மூத்த கண்காணிப்பாளர் சண்முகத்தை தாக்கினர். இதையடுத்து, தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, டோல்கேட் ஊழியர்கள் பணியை புறக்கணித்தனர். துரைப்பாக்கம் உதவி கமிஷனர் முரளி, இன்ஸ்பெக்டர் கவுதமன் ஆகியோர் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து டோல்கேட் ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். ஆனால், இதுவரை ஒரு நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. இந்த சம்பவத்தினால் ஒருமணி நேரத் திற்கும் மேலாக கட்டணம் செலுத் தாமல் அனைத்து வாகனங்களும் சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சியில் இருந்து மதுரை செல் லும் வழியில் நெடுஞ்சாலையில், விராலி மலையில் ஒரு டோல் பிளாசா உள்ளது. இவ்வழியாக கடந்த 18ம் தேதி திருச்சி மாவட்டம், மருங்காபுரி தி.மு.க., ஒன்றிய செயலர் செல்வராஜ் (45) என்பவர், கட்சியினருடன் காரில் வந்தார். டோல்கேட் ஊழியர்கள் செல்வராஜ் காரை வழிமறித்து, சுங்கவரிக்கான டிக்கெட்டை கொடுத்தனர். அப்போது, "நாங்கள் ஆளும் கட்சியினர். எங்களிடமே சுங்கவரி வசூலிக்கிறாயா?,' என்று கேட்டு செல்வராஜ், அவர்களிடம் தகராறு செய்தார்.
சிறிது நேரத்தில் காரில் இருந்த கட்சியினர் டோல் பிளாசாவையும், டோல் பிளாசா ஊழியர்கள், செல்வராஜ் காரையும் தாக்கினர். இதில், ஆத்திரமடைந்த செல்வராஜ், காரில் இருந்து துப்பாக்கியை எடுத்து "புல்லட்' நிரப்பியுள்ளார். அதில், இரண்டு புல்லட்க்கள் கீழே விழுந்துள்ளன. டோல் பிளாசா ஊழியர்கள் போலீசுக்கு போன் செய்யவே, செல்வராஜ் அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய் துள்ளனர். ஆனால், இது குறித்து மேல் நடவடிக்கை இதுவரை இல்லை.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, சென்னை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை என மூன்று முக்கிய சாலைகள் செல்கின்றன. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, சென்னை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆகியவை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளன. இச்சாலை களில் செல்லும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ஆங்காங்கே டோல் பிளாசா அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர வேறு சில சாலைகளில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில், டோல் பிளாசா அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ஊழியர்கள், இரு சக்கர வாகனங்கள் தவிர அனைத்து வாகன ஓட்டி களிடமும் கட்டணம் வசூலிக்க வேண்டும். வாகனங்கள் விரைவாக கட்டணம் செலுத்திவிட்டு செல்வதற்கு வசதியாக பல கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஆனால், அரசியல் கட்சி பிரமுகர்கள், தாதாக்கள், ரவுடிகள் பணம் செலுத்துவதில்லை.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் கிராமத்தில் டோல் பிளாசா அமைக்கப் பட்டுள்ளது. இதன் வழியே செல்லும் கார்களுக்கு 25 ரூபாய், வேன்களுக்கு 40 ரூபாய், பஸ் மற்றும் லாரிகளுக்கு 90 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. காரில் ஒரு முறை போய்விட்டு திரும்பி வர 40 ரூபாய் வசூலிக்கப் படுகிறது. மாத கட்டணமாக 900 ரூபாய் செலுத்தி பாஸ் பெற்றுக் கொள்ளலாம். இவ்வழியில் தினமும் குறைந்தது நூறு வாகனங்கள் பணம் செலுத் தாமல் செல்கின்றன. அரசியல் கட்சிக் கொடி கட்டிச் செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கவே ஊழியர்கள் பயப் படுகின்றனர்.சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அடுத்த பரனூர், தொழுப்பேடு ஆகிய இடங்களில் டோல் பிளாசா உள்ளன. இச்சாலையில் தினமும் 10 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன. இவற் றில் குறைந்தது 250 வாகனங்கள் கட்டணம் செலுத்துவதில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் மறைமலைநகரில் விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டிற்கு வந்த 1,500 வாகனங்கள், வன்னியர் சங்க மாநாட்டிற்கு வந்த 2,500 வாகனங் கள், மே மாதம் திருச்சியில் நடந்த இந்திய ஜனநாயக கட்சி மாநாட் டிற்கு சென்ற 250 வாகனங்கள், அரசு ஊழியர் சங்க மாநாட்டிற்கு சென்ற ஆயிரம் வாகனங்கள் கட்டணம் செலுத்தவில்லை. அதேபோல் அரசியல் தலை வர்கள் பிறந்த நாள் விழா, நினைவு தினம், கட்சி செயற்குழுக் கூட்டம், பொதுக்குழுக் கூட்டம் போன்றவை நடைபெறும்போது அதில் கலந்து கொள்ளச் செல்ப வர்கள் கட்டணம் செலுத்து வதில்லை.இதே நிலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள டோல் பிளாசாக்களிலும் உள்ளது. "கட்சிக் கொடி கட்டிய வாகனங்களிடம் பணம் கேட்டால் அசிங்கமாக திட்டுகின்றனர். வாகனத்தை மேலே ஏற்றி கொலை செய்து விட்டு 2,000 ரூபாய் அபராதம் கட்டிவிட்டு தப்பி விடுவோம் என்கின்றனர். உயிருக்கு பயந்து கட்சிக் கொடி கட்டிய வாகனங்களிடம் பணம் வசூலிப்பதில்லை. பணம் தராமல் செல்லும் வாகனங்கள் குறித்த விவரங்களை சேகரிப்பதில்லை. அதை சேகரித்தால் ஏன் பணம் வசூலிக்கவில்லை என மேல் அதிகாரிகள் கண்டிக்கின்றனர். பணம் கேட்டால் வண்டியில் வருபவர்கள் உதைக்கின்றனர். இப்பிரச்னையில் நாங்கள் இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கிறோம்' என, டோல் பிளாசா ஊழியர்கள் தெரிவித்தனர்.
சென்னை பை-பாஸ் சாலையில் உள்ள டோல்கேட் ஊழியர்கள் கூறும் போது "சுங்கவரி செலுத்துவதில் பொதுமக்கள் எந்த பிரச்னையும் செய்வதில்லை. கட்சிக்காரர்கள் தான் தகராறு செய்கின்றனர். கட்சியினரின் வாகனங்கள், வரி வசூலிக்கும் இடத்தில் நிற்காது. அதையும் தாண்டி, கேட் போடப் பட்டிருக்கும் இடத்திற்கு அருகே சென்று நிறுத்திவிட்டு, சத்தமாக "ஹாரன்' அடிப்பர். ஊழியர்கள் கேட்டை திறந்துவிடாவிட்டால், அசிங்கமாக திட்டுவதும், இறங்கி வந்து அடிப்பதும் வாடிக்கை. இந்த வகையில், தினசரி, சராசரியாக 100 முதல் 150 வாகனங்கள் வரை சுங்கவரி செலுத்தாமல் செல்கின்றன. அனைத்து கட்சிகளும் இதில் அடக்கம்' என்றனர்.
பல கோடி ரூபாய் இழப்பு! தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை பை-பாஸ் சாலை டோல்கேட்டில் மட்டுமே ஆண்டிற்கு 24 லட்சம் ரூபாய், அரசியல் கட்சியினரால் சுங்க வரி இழப்பு ஏற்படுகிறது. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கார்களுக்கு சென்னையில் இருந்து திருச்சி செல்ல ஐந்து இடங்களில் 165 ரூபாய் வரை சுங்கவரி வசூலிக்கப்படுகிறது. தினசரி 500 கட்சிக் கொடி கட்டிய வாகனங்கள், இச்சாலையில் சுங்கவரி செலுத்தாமல் செல்வதாக, டோல் பிளாசா ஊழியர்கள் கூறுகின்றனர். இந்த வகையில் தினசரி 82 ஆயிரம் ரூபாயும், ஆண்டிற்கு மூன்று கோடி ரூபாயும் வரி இழப்பு ஏற்படுகிறது. மொத்தத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 50க்கும் மேற்பட்ட டோல்கேட்களில் ஆண்டிற்கு 20 கோடி ரூபாய் வரை அரசியல் கட்சியினரால் வரி இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த சுமை பொதுமக்களின் தலையில் தான் வந்து விழும். சுங்கவரி வசூலிப்பதால், சாலைகள் முறையாக பராமரிக்கப்படுகின்றன. இதன் மூலம் வாகனங்களின் தேய்மான செலவும், எரிபொருள் செலவும் குறைகிறது. இதை கணக்கிட்டு பார்த்தால், சுங்கவரி கட்டணம் ஒரு பெரிய விஷயம் இல்லை என்று பலரும் கருதுகின்றனர். ஆனால், அரசியல்வாதிகளின் அடாவடியினால், எதிர்காலத்தில், சாலை மேம்பாட்டு திட்டங்களில் தனியாரின் முதலீடு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசு பஸ்கள் வரி பாக்கி!வரி செலுத்தாததால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டோல்கேட்டை கடந்து சென்ற அரசு பஸ்களை ஜி.எம்.ஆர்., நிறுவனத்தினர் நிறுத்தினர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில், "வரி செலுத்தி விடுகிறோம். அதுவரை பஸ்களின் பதிவு எண்களை பதியுங்கள்' என்று போக்குவரத்து கழக டெப்போ இயக்குனர்கள், மேலாளர்கள் கூறினர். இதனால், தற்போது சுங்கச்சாவடிக்கு நான்கு கோடி ரூபாய் வரி பாக்கி உள்ளது. இது குறித்து நெடுஞ்சாலை துறை செயலர், போக்குவரத்து துறை செயலருக்கு ஜி.எம்.ஆர்., நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது. உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சியில் உள்ள டோல்கேட்டில் திருச்சி டோல்வே பிரைவேட் லிமிடெட் ( டி.டி.பி.எல்) நிறுவனத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இரண்டு கோடி ரூபாய் வரி பாக்கி உள்ளது. சென்னை - புதுச்சேரி சாலையில் மரக்காணம் புத்துப்பட்டு அருகே தமிழ்நாடு சாலை பராமரிப்பு கழகம் (டி.என்.ஆர்.டி.சி) சார்பில் இயங்கும் டோல்கேட்டிலும் கட்சி மாநாடுகள் நடக்கும் போது சில பிரச்னைகள் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போலீஸ் "கப்சிப்'...!டோல் பிளாசாக்களில் ஏற்படும் பிரச்னைகளில், போலீசாரின் நடவடிக்கை குறித்து டோல் பிளாசா ஊழியர்கள் கூறுகையில், "ஒரு கட்சிக்காரர் மீது எந்த ஒரு புகார் கொடுத்தாலும் போலீசார் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. "கட்சிக் கொடியோடு வருபவரிடம் கட்டணம் கேட்கும்போது டோல்கேட் ஊழியர்களுக்கும், அந்த அரசியல்வாதிக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. அந்த சமயத்தில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தால் போலீசார் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக கட்டப் பஞ்சாயத்து செய்து அனுப்பி விடுகின்றனர். ஆனால், சம்பந்தப் பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, தக்க நடவடிக்கை எடுத்தால் மற்றவர்கள் தகராறு செய்வதற்கு தயங்குவர். போலீசார் இதை செய்யாமல் விடுவதே அரசியல்வாதிகள் கட்டணம் செலுத்தாமல் செல்வதற்கு காரணம். டோல்கேட்களில் ஊழியர் களிடம் தகராறு செய்யும் அரசியல்வாதிகள் மீது போலீசார் தக்க நட வடிக்கை எடுத்தால் மட்டுமே இதை தடுக்க முடியும்,' என்றனர்.
No comments:
Post a Comment