Powered By Blogger

Friday, June 25, 2010

AsianCup2010

தம்புலா : ஆசிய கோப்பையை சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் கைப்பற்றி அசத்தியது இந்திய அணி. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் இலங்கையை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தினேஷ் கார்த்திக் அசத்தல் அரைசதம் மற்றும் நெஹ்ராவின் மிரட்டல் பந்துவீச்சு, இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது.


ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்தது. லீக் சுற்றில் சொதப்பிய பாகிஸ்தான், வங்கதேசம் வெளியேறின. நேற்று தம்புலாவில் நடந்த பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.


மீண்டும் நெஹ்ரா: இந்திய அணியில் டிண்டா, ஓஜா நீக்கப்பட்டு, நெஹ்ரா, ஹர்பஜன் இடம் பெற்றனர். இலங்கை தரப்பில் முரளிதரன், மலிங்கா, குலசேகரா மீண்டும் அணிக்கு திரும்பினர். டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.


காம்பிர் "100': இந்திய அணிக்கு காம்பிர், தினேஷ் கார்த்திக் துவக்க வீரர்களாக களமிறங்கினர். தனது 100வது ஒரு நாள் போட்டியில் விளையாடிய காம்பிருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. குலசேகரா வீசிய 2வது ஓவரில் இரு முறை கண்டம் தப்பினார். முதலில் கண்டம்பி "கேட்ச்சை' கோட்டை விட்டார். அடுத்தபந்தில் சங்ககரா கைநழுவியது. இதனை பயன்படுத்திக் கொள்ளாத காம்பிர்(15) பரிதாபமாக ரன் அவுட்டானார்.


கார்த்திக் அதிரடி: அடுத்து வந்த விராத் கோஹ்லி "கம்பெனி' கொடுக்க, தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடினார். மகரூப் வீசிய 8வது ஓவரில் 3 பவுண்டரி விளாசினார். பின் மாத்யூஸ் வீசிய 14வது ஓவரிலும் 3 பவுண்டரி அடித்தார். மறுபக்கம் நிதானமாக ஆடிய கோஹ்லி(28), மலிங்கா வேகத்தில் வீழ்ந்தார். இந்த நேரத்தில் அரைசதம் கடந்த கார்த்திக்(66), கண்டம்பி பந்தில் வெளியேற, சிக்கல் ஏற்பட்டது.


தோனி "சிக்சர்': மகரூப் பந்தில் ஒரு இமாலய சிக்சர், முரளிதரன் பந்தில் ஒரு பவுண்டரி பறக்க விட்ட தோனி அதிக நேரம் நீடிப்பார் என எதிர் பார்க்கப்பட்டது.ஆனால், கண்டம்பி பந்தில் குலசேகராவின் சூப்பர் "கேட்ச்சில்' 38 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். மலிங்கா "யார்க்கரில்' ரெய்னா(28) நடையை கட்டினார்.


மந்தமான ஆட்டம்: கடைசி கட்டத்தில் ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா சேர்ந்து மந்தமாக ஆடினர். இவர்கள் "பவர் பிளே' ஓவரில் ஒன்று, இரண்டு ரன்களாக எடுக்க, எதிர்பார்த்த ஸ்கோரை எட்ட முடியவில்லை. குலசேகரா வேகத்தில் ரோகித் சர்மா(41) அவுட்டானார். இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 268 ரன்கள் எடுத்தது. ஜடேஜா(25), ஹர்பஜன்(7) அவுட்டாகாமல் இருந்தனர்.


திணறல் துவக்கம்: சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணி எடுத்த எடுப்பிலேயே திணறியது. பிரவீண் வீசிய முதல் ஓவரில் தில்ஷன் "டக்' அவுட்டானார். தொடர்ந்து மிரட்டிய இந்திய "வேகங்கள்' அடுத்தடுத்து விக்கெட் வேட்டை நடத்தினர். ஜாகிர் பந்தில் தரங்கா(16) காலியானார்.


நெஹ்ரா அசத்தல்: இதற்கு பின் நெஹ்ரா போட்டுத் தாக்கினார். போட்டியின் 14வது ஓவரில் ஜெயவர்தனா(11), மாத்யூசை(0) வெளியேற்றி, இரட்டை "அடி' கொடுத்தார். தனது அடுத்த ஓவரில் சங்ககராவை(17) அவுட்டாக்கிய இவர், இலங்கை அணியின் வீழ்ச்சிக்கு வித்திட்டார். அப்போது 15.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 51 ரன்கள் எடுத்து தத்தளித்தது. பின் கண்டம்பி, கபுகேதரா இணைந்து போராடினர். கண்டம்பி(31) ரன் அவுட்டானார். இறுதியில் இலங்கை அணி 44.4 ஓவரில் 187 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. அரைசதம் கடந்து ஆறுதல் அளித்த கபுகேதரா(55) அவுட்டாகாமல் இருந்தார்.இந்தியா சார்பில் அபாரமாக பந்துவீசிய நெஹ்ரா அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார்.

No comments:

Post a Comment