உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி:
""உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவில் மாற்றமில்லை,'' என, தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கூறினார். சென்னை சத்தியமூர்த்தி பவனில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் 5 ஆயிரத்து 414 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். இவர்களில், 794 பேர் பெண்கள். தமிழகத்தில், 221 சட்டசபை தொகுதிகளில் மனுக்கள் பெற்றுள்ளோம். மீதமுள்ள 13 தொகுதிகளில் விருப்ப மனுக்கள் பெறப்படும்.
அடுத்த மாதம், நேர்காணல் நடத்தப்பட்டு, இறுதிப் பட்டியல் தலைமைக்கு விரைவில் அனுப்பப்படும். தமிழகத்தில், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 14 ஆயிரத்து 104 பேர் உள்ளனர். இவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட குழு, உள்ளாட்சி தேர்தலில் இளைஞர்களை அதிகம் பங்கேற்க வைப்பதற்கான விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளும்.
உள்ளாட்சித் தேர்தலில், இளைஞர் காங்கிரசுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்க வேண்டும் என, கட்சி தலைமையிடம் வலியுறுத்துகிறோம். "கூட்டணி குறித்து பேசும் தகுதி இளைஞர் காங்கிரசுக்கு இல்லை' என, தங்கபாலு கூறுவது சரியில்லை. இக்கருத்தை கூறுவதற்கு, அவருக்குத் தான் தகுதியில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் பலவீனம் அடைய, தங்கபாலுவே காரணம். உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவில் மாற்றமில்லை. இவ்வாறு யுவராஜா கூறினார்.
No comments:
Post a Comment