திருவண்ணாமலை அருகே, பரிகார பூஜைக்காக, 11 வயது சிறுமிக்கும், 50 வயது முதியவருக்கும் திருமணம் செய்து வைத்த கொடுமை நடந்தது. பெண் வீட்டாருக்கு சீர்வரிசையாக, 30 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் பீர், பிராந்தி பாட்டில்கள் வழங்கப்பட்டன.சேத்துப்பட்டு அருகே, மேலானூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஜெயபால்சிங், 50. நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர். இவர் மூலிகை மருந்துகள் தயார் செய்து, விற்பனை செய்து வருகிறார். திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில், மூன்று கணவனை இழந்த, அதே இனத்தைச் சேர்ந்த ரஞ்சினி, 35, என்ற பெண்ணை காதலித்து, தாலி கட்டாமல் குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு மூன்று மகன்கள், நான்கு மகள்கள் உள்ளனர்.முறையாக திருமணம் செய்யாததால், இவர்களது மகன் மற்றும் மகள்கள் திருமண வயதை நெருங்கியுள்ள நிலையில், அவர்களுக்கு யாரும் பெண் கொடுக்கவும், பெண் எடுக்கவும் முன்வரவில்லை.இதனால், இவர்களது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டது. ஜெயபால்சிங் கவலையடைந்
தார். இது குறித்து, நரிக்குறவர் சமுதாயத்தினரிடையே ஜெயபால்சிங் முறையிட்டுள்ளார்.அதற்கு, நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பரிகாரமாக, நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த, பருவமடையாத பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனக் கூறினர்.இதையடுத்து ஜெயபால்சிங், காஞ்சிபுரத்தில் வசித்து வரும் லட்சுமணன்- பேபி என்ற நரிக்குறவ தம்பதியரின் மகள் ராதிகா, 11, என்ற சிறுமியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.இதற்காக, நேற்று முன்தினம், பெண் வீட்டாருக்கு, 30 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், இரண்டு பிராந்தி பாட்டில், ஒரு பீர்பாட்டில் சீர் கொடுத்து திருமணம் செய்து கொண்டார்.திருமணம் முடிந்ததும், திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு, கோழிக்கறி குழம்புடன், தடபுடலாக விருந்து அளிக்கப்பட்டது. எதையும் அறியாத சிறுமி, திருமணம் முடிந்தவுடன் வழக்கம் போல், அங்குள்ள சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
No comments:
Post a Comment