Powered By Blogger

Thursday, April 28, 2011

Trichy N.Shiva MP

என் ஊர்

"தி.மு.க.வி்ன் தாலாட்டுத் தொட்டில் திருச்சி !"

''பழமையை இழக்காமல் புதுமை பூசிக்கொள்ளும் அழகிய நகரம் எங்கள் திருச்சி. பிறந்தது, தவழ்ந்தது, ஓடி விளையாடியது, படித்தது, அவசர நிலைக் காலத்தில் 'மிசா’ சட்டத்தில் கைதாகும் வரை வாழ்ந்தது என என் வாழ்வில் எல்லாமே திருச்சிதான். அங்கு கீழ ஆண்டார் வீதிக்காரன் நான்!

திருச்சியில் உள்ள அனைத்து சாமிகளின் திருவீதி உலாக்களும் எங்கள் வீதியிலும் பயணிக்கும். மலைக்கோட்டையின் இரண்டாவது பிராகார வீதி இது. தைப் பூசம் அன்று இரவு முழுவதும் தெருவே விழித்து இருக்கும். விடுமுறை நாட்கள், ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 9 மணிக்கு பட்டாம்பூச்சிக் கூட்டம் பறக்கத் தொடங்கி 10 மணிக்கு அடங்கிவிடும். அருகில் உள்ள சாவித்திரி வித்தியாசாலா பள்ளி, சீத்தா லட்சுமி ராமசாமி கல்லூரிக்குச் செல்லும் இளம்பெண்களின் கூட்டம்தான் அது. நாங்கள் படித்த இ.ஆர். மேல்நிலைப் பள்ளிக்கும் அதுதான் வழி!

பள்ளிக் காலம் வரை அம்மாதான் என்னை வழிநடத்தினார்கள். திருவரங்கம் கோயிலுக்கு நடத்தியே அழைத்துப் போவார்கள். பழைய காவிரிப் பாலத்தில் நடக்கும்போது கீழே சுழித்துக்கொண்டு ஓடும் நீரின் சுழற்சி தந்த அச்சம் இன்னும் நெஞ்சில் இருக்கிறது. திருச்சியின் கோயில்கள் சிறப்பு மிக்கவை மட்டும் அல்ல; வித்தியாசமானவையும் கூட! புராண சிறப்புமிக்க தாயுமானவர் கோயில், நீர் சூழ்ந்த திருவானைக்கா, வானுயர்ந்த திருவரங்கம், திறந்த நிலையில் இருக்கும் வெக்காளி அம்மன் கோயில் என இங்கு அமைந்து இருக்கும் ஒவ்வொரு கோயிலுக்கும் தனி மகத்துவம் உண்டு!

வரலாற்றோடு மிக நெருக்கமான ஊர் திருச்சி. குறிப்பாக, திராவிட இயக்க வரலாற்றில் திருச்சிக்குப் பெரும் முக்கியத்துவம் உண்டு. பெரியார், தான் பிறந்த மண்ணுக்கு இணையாக நேசித்த ஊர் இது. 1938-ல் பட்டுக்கோட்டை அழகிரி இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கிய இடம். தேர்தலில் போட்டியிடுவது என தி.மு.க. முடிவு எடுத்த இடம். அண்ணா முதல்வராகி முதன்முதலாக வந்த இடம். கலைஞர் முதன்முதலாகக் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட இடம் என திராவிட இயக்க வரலாற்றில் திருச்சிக்கு அழுத்தமான முத்திரைகள் உண்டு!

என் வாழ்வின் வசந்த காலம், கல்லூரிக் காலம். குப்புசாமி, சேதுராமன், சின்னசாமி, ராமலிங்கம், தமிழிசை அரசன், பாபு, ஜான், சோமு என நண்பர்கள் கூட்டத்தோடு திருச்சியை என் கால்களால் அளந்த காலம். அந்நாட்களில் சிங்காரத் தோப்பில் 'மெட்ரோ ஹோட்டல்’ என்று ஓர் உணவகம் உண்டு. மூணு சமோசா, ஒரு டீ 30 பைசா. சாயங்கால நேரங்களில் அங்கு சாப்பிட்டுவிட்டு சைக்கிளை எடுத்தால், இரண்டாவது சுற்றை நாங்கள் முடிக்கும்போது கடை வீதியில் கடைகளின் கதவுகளை அடைக்கத் தொடங்கி இருப்பார்கள். பாதி நேரம் வீதியில், பாதி நேரம் திரையரங்குகளில் என்று கழிந்த காலம் அது. 'அருணா’விலும் 'பிளாஸா’விலும் ஆங்கிலப் படங்கள் ஓடும். 'கெயிட்டி’யில் இந்திப் படங்கள் ஓடும். 'முருகனி’ல் பழைய படங்கள் ஓடும். பின்னாளில் ஊர் உருமாறியபோது 'ராஜா’, 'ஜுபிடர்’, 'பிரபாத்’, 'பிளாசா’ தியேட்டர்கள் இடிக்கப்பட்டதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அவை வெறும் சினிமா கொட்டகைகளா... வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே இருந்த இடங்கள் அல்லவா?

ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் நீர் வீசி விளையாடும் நிகழ்ச்சி வாணப்பட்டரை மாரியம்மன் தேரோட்டத்தின் போது நடக்கும். அப்போது எல்லாம் காலை 7 மணிக்குக் கிளம்பும் தேர் ஆண்டார் வீதிக்கு வந்து சேரும்போது கிட்டத்தட்ட மதியம் 2 மணி ஆகிவிடும். இப்போது எல்லாம் காலை 10 மணிக்கே முழு பிராகாரமும் சுற்றி முடித்து தேர் நிலை திரும்பிவிடுவதாகச் சொல்கிறார்கள். காரணம், ஊர் கூடி தேர் இழுப்பது இல்லை. இயந்திரங்கள் உந்திச் செல்கின்றன. தோழமையோடு மஞ்சள் நீர் வீசி விளையாடுகிற ஆண்களும் பெண்களும் இப்போது இல்லை!

ஊர் உருவம் மாறியிருக்கிறது. விலகாமல் தொடர்கின்ற அம்மாவின் நினைவுகளைப்போலவே, நான் பிறந்து வளர்ந்த வசந்தராயம் பிள்ளை சந்து ஆறாம் இலக்கம் உள்ள வீடு மட்டும் இன்னும் அப்படியே உருமாறாமல் இருக்கிறது. அதேபோலவே, எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தாலும் என் ஊரின் மீது எனக்கு உள்ள பற்றும் அன்பும் மாறாது!

தங்கள் ஊர் மீது பலருக்கும் ஆசை இருக்கலாம். நான்கொண்டது காதல். அது அழியாதது. பலர் அறியாதது!

1 comment:

  1. oh ..oh..wat a write up, i simply adore the word you used to describe Trichy, i used to get taste of Trichy's hotel, movie hall (Sippi Theatre), narrow road, roadside eatery, Aadi 18, Extreme Summer Heat with Theechati and band. I Love Trichy

    ReplyDelete