Powered By Blogger

Sunday, October 3, 2010

தேர்தல் 2011 : விஜயகாந்திற்கு அக்னி பரீட்சை

தமிழ் படங்களில் ஹீரோவாக  நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., மக்களிடம் தனக்கிருந்த  செல்வாக்கால்  தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வராக பொறுப்பேற்று,  இந்திய சரித்திரத்தில் சாதனை படைத்தார். இவருக்கு அடுத்து, ஆந்திராவில், என்.டி.ராமாராவ்,  தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கி தேர்தலில் நின்ற போது அவருக்கு மக்கள் மகத்தான வரவேற்பு அளித்தனர்.

 இதை தொடர்ந்து, பல  சினிமா நடிகர்கள், நடிகைகளும் அரசியலில் கால்விட்டனர். சத்ருகன் சின்ஹா, அமிதாபச்சன், சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர் உள்ளிட்ட சிலர் அரசியலுக்கு வந்தனர். ஆனால், அவர்களால் மக்களிடையே தனி பெரும் செல்வாக்கை பெற முடியவில்லை.இந்த வகையில் விஜயகாந்தும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை தொடங்கினார். கடந்த சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் அவரது கட்சி போட்டியிட்டது.ஆனால், விருத்தாசலத்தில் நின்ற விஜயகாந்திற்கு மட்டுமே வெற்றி கிட்டியது. மற்றவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இதை தொடர்ந்து நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் ஒரு சில இடங்களில் மட்டுமே தே.மு.தி.க., வெற்றி பெற்றது.

பின்பு நடந்த லோக்சபா தேர்தல், இடைத்தேர்தல்கள் ஆகியவற்றில் மற்ற கட்சிகளுடன் இணைந்து போட்டியிடாமல் தனித்தே போட்டியிட்ட இவரது கட்சி, எல்லா இடங்களிலும் தோல்வியையே சந்தித்தது.அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலிலும் தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ள விஜயகாந்த், தனக்கும் மக்களுக்கும் இடையே தான் கூட்டணி என்று கூறி வருகிறார். தமிழகத்தில் இவரது கட்சிக்கு 10 சதவீத ஆதரவே உள்ள நிலையில், இவர் தனித்து போட்டியிட்டால் மற்ற கட்சிகளின் ஓட்டை பிரிக்கத்தான் முடியுமே தவிர வெற்றி பெற முடியாது என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இளைஞர்கள், தலித்துகள், நடுத்தர வகுப்பினர் ஆகியோரின் ஓட்டுக்களையே பெரிதும் கவர்ந்தார் எம்.ஜி.ஆர்., அதே பாணியில் விஜயகாந்த் தனது கட்சியை செயல்படுத்தி வருகிறார். ஆனால், எம்.ஜி.ஆர்., காலம் வேறு.  தற்போதுள்ள காலம் வேறு. நடுத்தர வகுப்பினர் தற்போது தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., ஆகிய கட்சிகளை சார்ந்துள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலில் பல தொகுதிகளில் ஒரு லட்சம் ஓட்டுக்கள் வரை தே.மு.தி.க., கட்சி பெற்றது. இந்த ஓட்டுக்களில், தி.மு.க.,- அ.தி.மு.க.,  சேர்ந்த ஓட்டுகள் எத்தனை என்பது தான் புரியாத புதிர். எனவே, விஜயகாந்த் தனித்து நின்றால் கடந்த முறை போலவே, தி.மு.க.,- அ.தி.மு.க., கட்சிகளின் ஓட்டுகளை பிரிப்பாரே தவிர தனிப்பெரும்பான்மையான இடங்களை  வெற்றி பெற முடியாது.படங்களிலும் சரி, அரசியலிலும் சரி எம்.ஜி.ஆர்., ஹீரோவாக திகழ்ந்தார். அப்படி இருந்தும் அவர் தேர்தலின் போது, கூட்டணி வைத்துக் கொண்டார். எம்.ஜி.ஆருடன் விஜயகாந்தை ஒப்பிட முடியாது. 

இதை அவரே ஒப்புக்கொள்கிறார்.மக்களிடையே சென்று தனக்கு ஓட்டு போடும் படி எம்.ஜி.ஆர்., கேட்டபோது, அவரை முழுமையாக நம்பி மக்கள் ஓட்டளித்து முதல்வராக்கினர். இப்படி விஜயகாந்தை ஒட்டு மொத்த மக்களும் நம்புவார்கள் என்று சொல்வதற்கில்லை.

அப்படிப்பார்த்தால், வரும் தேர்தல் விஜயகாந்திற்கு ஒரு "அக்னி பரீட்சை'.இந்த தேர்தலை  அவர் எப்படி செயல்படப் போகிறார் என்பதை வைத்து தான் அவரது அரசியல் எதிர்காலம் இருக்கும். தி.மு.க., அ.தி.மு.க., ஆகியவற்றை தவிர மூன்றாவது ஒரு கட்சி ஆட்சி செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். அதற்காக ஒரே தேர்தலில் முதல்வர் இருக்கையில் விஜயகாந்த் அமர்வது சாத்தியமில்லை. கூட்டணி மூலம் ஆட்சியில் பங்கு கொண்டு, பின் அதிகாரத்தை கைப்பற்றுவது தான் அரசியல் சாதுர்யம். அப்படிச் செய்யாமல் மீண்டும், "தனித்து போட்டி' என்ற முடிவை எடுப்பாரானால் அது அரசியல் பயணத்தில் வீழ்ச்சியையே தரும் என்று கணிக்கின்றனர்.

  சிறப்பு நிருபர்

No comments:

Post a Comment