தமிழக வரலாற்றில், பொற்காலம் எனப் போற்றப்படும் சோழர் வரலாற்றில், மாமன்னன் ராஜராஜசோழன் சிறப்பிடம் பெற்று விளங்குகிறான். இரண்டாம் பராந்தகன் என்ற சுந்தர சோழனுக்கும், வானவன் மாதேவிக்கும் பிறந்த மைந்தன் அவன்.அருள்மொழிவர்மன் என்பது இவனது இயற்பெயர். கேரளாந்தகன், சிங்களாந்தகன், மும்முடிசோழன், சிவபாதசேகரன், திருமுறை கண்ட சோழன், சத்திரிய சிகாமணி, ராஜாஸ்ரயன் என்ற, பல சிறப்புப் பெயர்களைக் கொண்டு விளங்கினான்.
""செந்திரு மடந்தை மண் ஸ்ரீராஜராஜன் இந்திர சமானன் இராஜசர் வக்ஞன்,'' என்று, திருக்கோயிலூர் கோவிலிலுள்ள ஒரு கல்வெட்டு புகழ்ந்து பேசுகிறது.ஐப்பசி மாதம் சதய நாளில் ராஜராஜன் பிறந்தான். அவனது பிறந்த நாளான ஐப்பசி சதய நாளில் திருவெண்காடு, திருப்புகலூர், எண்ணாயிரம், திருவிடந்தை, திருநந்திக்கரை, கோபுரப்பட்டி (பாச்சூர்) போன்ற பல கோவில்களில் சிறப்பான வழிபாடுகள் நடக்க, தானம் அளிக்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம்!
தஞ்சைப் பெரிய கோவிலில் சதயத்திருவிழா, 12 நாட்கள் சிறப்பாக நடந்ததை, அக்கோவில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்நாட்களில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது, அபிஷேக நீரில் ஏலக்காய், செண்பக மொட்டுகள் போடப்பட்டு, மிகுந்த நறுமணத்துடன் அபிஷேகம் செய்யப்பட்டது.ராஜராஜ சோழனால் பலத் திருக்கோவில்கள் கட்டப் பெற்றன. அவற்றில், தஞ்சைப் பெரிய கோவில் தலைச்சிறந்த, ஒப்பற்ற கோவிலாகத் திகழ்கிறது. கட்டடக் கலை, சிற்பக் கலை, செப்புத் திருமேனிகள் வார்ப்புக்கலை, ஓவியக் கலை, கல்வெட்டுகள் கூறும் செய்திகள் ஆகிய அனைத்துக்கும் சிறப்பிடமாகத் திகழ்கிறது.எனவே, இக்கோவிலை ஓர் ஒப்பற்ற கலை வரலாற்றுக் களஞ்சியம் எனக் கூறுவதில் மிகையில்லை!இக்கோவில், உலக வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால், சீரிய முறையில் போற்றிப் பராமரிக்கப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம்!பிரகதீசுவரர் கோவில் என்று இன்று அழைக்கப்பட்டாலும், "இராஜராஜீச்சுரம்' என்றும், "ஸ்ரீஇராஜராஜீசுவர முடையார் கோவில்' எனவும் கல்வெட்டுகளில் உள்ளதைக் காணலாம்.""பாண்டிய குலாசனி வளநாட்டு தஞ்சாவூர் கூற்றுத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையார்,'' என்று, இப்பெரும் கோவிலைக் கட்டியதை பெருமிதத்தோடு ராஜராஜன் கூறுகின்றான். அடித்தளம் முதல் சிகரம் வரை கற்களைக் கொண்டு கட்டப்பட்டதால் இக்கோவில், "கற்றளி' என அழைக்கப்படுகிறது.
கருவறைக்கு மேலே உள்ள விமானம், 13 தளங்களையும், 216 அடி உயரமும் கொண்டு கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. உயர்ந்து காணப்படும் விமானம், "தட்சிணமேரு' எனச் சிறப்பித்து அழைக்கப்படுகிறது.
இக்கோவிலின் கிழக்குப் பக்கத்தில், இரண்டு கோபுரங்கள் காணப்படுகின்றன. முதல் கோபுரம், "கேரளாந்தகன் திருவாயில்' என்றும்; இரண்டாவது கோபுரம், "ராஜராஜன் திருவாயில்' என்றும் பெயரிட்டு குறிப்பிடப்படுவது சிறப்பு.ராஜராஜன் திருவாயிலில், அடித்தளத்தில் சண்டீசர் கதை, கண்ணப்ப நாயனார் வரலாறு, காமதகனம், வள்ளித் திருமணம் போன்றவை தொடர் சிற்பங்களாகவும், மேற்குப் பகுதியில் காணப்படும் பெரிய துவாரபாலகர் சிற்பங்களும் நம் கருத்தை கவர்கின்றன. கோவிலின் திருச்சுற்றுமாளிகையில், 36 பரிவார கோவில்கள் காணப்படுவதும் சிறப்பாகும்.
இறைவன் எழுந்தருளியிருக்கும் கருவறை அமைப்பு தனிச் சிறப்பானது. கருவறை ஒரு திருச்சுற்று உடையதாக விளங்குகிறது. இவ்வகையான கோவில் அமைப்பை, "சாந்தாரக் கட்டடக் கலை' அமைப்பு எனக் கூறுவர்.இத்திருச்சுற்றில் தெற்கில் அகோர சிவர், மேற்கில் தத்புருஷர், வடக்கில் வாமதேவர் என்று தெய்வ வடிவங்கள் அமைக்கப் பெற்று, சிவபெருமான் சதாசிவ மூர்த்தியாகக் காட்சி தரும் அற்புத கோவில் இது!
கருவறை இரண்டு தளம் உடையதாக விளங்குகிறது. மேற்தளத்தில் சிவபெருமானே ஆடவல்லனாக, நடமாடும் சிற்பங்கள் காணப்படுகின்றன. நடனத்தில் வெளிப்படுத்தப்படும் 108 கரணங்களில், 81 மட்டுமே முழுமை அடைந்ததாக உள்ளது.
இறைவனுக்கு மேலே உள்ள விமானத்தின் உட்கூடு, வெற்றிடமாக, "கதலிகா கர்ணம்' என்ற கட்டடக் கலை அமைப்பில் அமைந்துள்ளது சிறப்பு.இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுகளில், மூன்று சிற்பிகளின் பெயர்கள் காணப்படுகின்றன. 1.வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜராஜப் பெருந்தச்சன், 2.குணவன் மதுராந்தகனான நித்தவினோதப் பெருந்தச்சன், 3.இலத்திச் சடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் என்ற இம்மூவரும், தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டுவதில் பெரும் பங்கு கொண்டவர்கள் ஆவர். இக்கோவிலில், ராஜராஜசோழனின் 25வது ஆட்சி ஆண்டில், வழிபாடு துவங்கி விட்டதை அறிகிறோம்.
நாள்தோறும் அபிஷேகத்திற்கும், விளக்குகள் எரிப்பதற்கும், கோவில் பணிக்காக தளிச்சேரிப் பெண்கள் 400 பேர் நியமிக்கப்பட்டதையும், மெய்க்காவலர்கள் - பரிசாரகர்கள் நியமிக்கப்பட்டதையும், திருக்கோவிலில் பணியாற்றியவர்கள் பற்றியும், நடந்த திருவிழாக்கள் பற்றியும் கல்வெட்டுகள் விரிவாகக் கூறுகின்றன.கோவிலில் தேவாரம் பாடுவதற்கு 48 பேரும், அவர்களுடன் கொட்டி மத்தளமும் - உடுக்கையும் வாசிக்க இருவர் ஆக, 50 பேர் நியமிக்கப்பட்டனர் என்பதை அறியும் போது, ராஜராஜன் திருமுறைப் பாடல்களிடம் கொண்டிருந்த பக்தியும் - ஈடுபாட்டையும் நம்மால் அறிய முடிகிறது!இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுகள், மிக அழகாகப் பொறிக்கப்பட்டுக் காணப்படுகிறது. தஞ்சைப் பெரிய கோவிலுக்கு மெய்க்காப்பாளர்கள் நியமிக்கப்பட்ட விவரத்தைக் குறிக்கும்போது, வடக்கில் ஈசானமூர்த்தி கோவில் வரை கல்லில் வெட்டி, அங்கு இடம் போதாமல் போக, ராஜராஜன் திருவாயிலின் இடப்பக்கம் கல்வெட்டு தொடர்ச்சி வெட்டப்பட்டுள்ளது என்ற விவரம் கல்வெட்டில் காணப்படுகிறது.
கோவிலுக்கு தொடர்பான அனைத்து விவரங்களும் முறையாக கல்வெட்டாகப் பதிவு செய்ய ராஜராஜன் கொண்டிருந்த ஈடுபாட்டை இதனால் அறிய முடிகிறது.ராஜராஜனும், அவனது தேவியர்களும், மகன் ராஜேந்திர சோழனும், அதிகாரிகளும் சேர்ந்து, 70க்கும் மேற்பட்ட செப்புத் திருமேனிகளை கோவிலுக்கு செய்தளித்துள்ளனர்.அவ்வாறு அளிக்கப்பட்ட திருமேனியின் உயரம், உருவ அமைப்பு, உலோகம் போன்ற விவரங்களை, கல்வெட்டுகள் துல்லியமாகக் குறிப்பிடுவதால், தஞ்சைப் பெரிய கோவில் வார்ப்புக் கலைக்கும் சிறப்பிடமாகத் திகழ்கிறது.இக்கோவிலுக்கு அளிக்கப்பட்ட பஞ்சதேகமூர்த்தி, தட்சிணமேருவிடங்கர், அர்த்தநாரீசுவரர், சண்டீசர் வரலாறு கூறும் திருமேனி போன்றவை வேறு எந்த கோவிலிலும் காண இயலாததாகும்.இக்கோவிலில் எழுந்தருளியுள்ள இறைவனுக்கும், வீதியுலா எழுந்தருளும் திருமேனிகளுக்கும், நகைகள் செய்து அளிக்கப்பட்டன. அவற்றின் பெயர்கள் மற்றும் அதன் எடை போன்றவை கல்வெட்டுகளில் துல்லியமாகக் குறிக்கப்படுகிறது.
நகைகளின் பெயர்கள் - திருப்பட்டம், திருக்கைக்காறை, திருப்பட்டிகை, முத்துவளையல், திருமுடி, திருமாலை, மாணிக்கத்தாலி, நவரத்தின மோதிரம், ரத்னவளையல், ரத்னகடகம், பவழக்கடகம், திருவடி நிலை போன்ற, பல அணிகலன்களின் பெயர்கள் காணப்படுகின்றன.இக்கோவிலுக்கு அளிக்கப் பெற்ற முத்துக்களில் தான் எத்தனை வகை! வட்டம், அனுவட்டம், ஒப்புமுத்து, குறுமுத்து, நிம்பொளம், பயிட்டம், அம்பு, சிவந்த நீர், குளிர்ந்த நீர் என்று பல்வகை முத்துக்கள் கல்வெட்டுகளில் கூறப்படுகின்றன.கோவில் வழிபாட்டிற்காக பல வகையான பாத்திரங்கள் பொன், வெள்ளியால் செய்து அளிக்கப்பட்டன.
அவைகளின் பெயர்கள்: மண்டை, கொண்டி, தட்டம், குடம், கிடாரம், ஒட்டுவட்டில், கலசம், கலசப்பானை, தாரைத்தாள்வட்டில், படிக்கம், குறுமடல், காளாஞ்சி, இறண்டிகை போன்ற பரிகலன்கள் செய்தளிக்கப்பட்டன.இவற்றின் எடை எவ்வளவு என்று, ஒவ்வொரு பாத்திரத்திற்கும் கல்வெட்டு குறிப்பது மிகவும் சிறப்பானது.
சில பாத்திரங்களில், "சிவபாதசேகரன்,' "ஸ்ரீராஜராஜன்,' "பஞ்சவன்மாதேவி' என்ற பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்ததையும் நம்மால் அறிய முடிகிறது.தமிழகத்திலேயே இக்கோவிலில் மட்டும் தான் சோழர் கால ஓவியங்கள் காணப்படுவது சிறப்பாகும். மேலும், நாயக்கர் கால ஓவியங்களும், மராட்டியர் கால ஓவியங்களும் இக்கோவிலில் காணப்படுகின்றன.இத்திருக்கோவிலில், "உலக முழுவதுடைய நாயகி' எனப் பெயர் கொண்ட அருள் வழங்கும் அம்மன் கோவில் 13ம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகும்.திருச்சுற்றில் வடமேற்கில் காணப்படும் சுப்ரமணியர் கோவில் தஞ்சை நாயக்க மன்னர்களின் கலைப் படைப்பாகும். திருச்சுற்றில் தென்மேற்கில் காணப்படும் விநாயகர் சன்னிதி மராட்டியர் கால கலைப்படைப்பாகும். எனவே, தஞ்சைப் பெரிய கோவில் ஒப்பற்ற ஓர் கலை - வரலாற்றுக் களஞ்சியமாகத் திகழ்கிறது என்றால் மிகையில்லை!இத்தகைய சிறப்பு வாய்ந்த தஞ்சைப் பெரிய கோவில் நிறுவப்பட்டு, 1,000 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதை, தமிழக அரசு சிறப்பாகக் கொண்டாடுகிறது. தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் இக்கோவிலைக் கண்டு மகிழ்வோம்! பெருமை கொள்வோம்! போற்றிப் பாதுகாப்போம்!